×

பிரிட்டிஷ் கால தடுப்பணை நிரம்பிய நிலையில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 23 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் ஏரிகள்-நூறு நாள் திட்ட தொழிலாளர்கள் களமிறங்கினர்

கலசபாக்க : பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து ஏரிகள் நிரம்பிட நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்புமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
கலசபாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இங்கு செய்யாறு, கல்லாறு ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது.

அதேபோல் கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மிருகண்டா அணை நிரம்பி உபரி நீர் திறந்து விட்டால், சுற்றியுள்ள 17 ஏரிகள்  நிரம்பிட வாய்ப்புகள் உள்ளது. தற்போது தொடர் மழை காரணமாக கலசபாக்கம் தாலுகாவில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. கலசபாக்கம் அடுத்த மட்டவெட்டு ஏரி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காரப்பட்டு, கீழ்பாலூர், மேல் பாலூர், கடலாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு திறந்துவிடப்பட்ட உபரி நீர் சென்றால் ஏரிகள் நிரம்பும்.

 பிரிட்டிஷ் காலத்தில் கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து ஏரி நீர்வரத்து கால்வாய்கள் செல்லும் கால்வாய்கள் தூர் வாராமலும், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. கடலாடி ஊராட்சியில் ஐந்து ஏரிகள் உள்ளன. இந்த ஐந்து ஏரிகளும் நிரம்பினால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு ஏரிப்பாசன விவசாயிகள் பயனடைவர்.
 23 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கிராமத்தில் உள்ள ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. இங்கு அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் சீரக சம்பா நெல் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர், இங்கு உற்பத்தியாகும் சீரக சம்பா நெல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரி நிரம்பா விட்டாலும் கூட தற்போது பெய்த கனமழையின் காரணமாக அறுவடை தருவாயில் இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்காலத்தில் கடலாடி பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்ப வேண்டும் என்பதற்காக கீழ்பாலூர் கிராமத்தில் உள்ள பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணியில் நேற்று முன்தினம் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இப்பணியினை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்ததின் பேரில் முயற்சி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடி சூடம் ஏற்றி இதற்கான பணியில் இறங்கியுள்ளனர். இவர்களின் முயற்சி வெற்றி அடைந்தால் எதிர்காலத்தில் ஏரி நிரம்ப வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நீர்வரத்து கால்வாய்களை தூர்வார கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : lakes ,project workers ,British , Kalasapakka: Drainage canals to fill lakes from dams built during British rule
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!