போத்தனூர்-பொள்ளாச்சி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்-110 கி.மீ. வேகத்தில் சென்றது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி-கோவை, கோவை-பொள்ளாச்சி வரையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்தில் ரயில்

இயக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இருப்பினும், அகல பாதையில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டது. இந்நிலையில், சுமார் 5 மாதத்திற்கு முன்பு, மின்சார ரயில் இயக்க ஆங்காங்கே ராட்சத மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்தது. இதற்கிடையே, கடந்த மே முதல் அக்டோபர் மாதம் வரை பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரையும், கோவையில் இருந்து திண்டுக்கல் வரையும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

நடந்தது.

தற்போது, கொரோனா ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயங்க துவங்கி உள்ளன. அதன்படி, பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் மீண்டும் ரயில் இயக்கப்பட்டன. இதையடுத்து, பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும், பாலக்காட்டிற்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வழித்தடத்தில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  

அதன்படி, கோவை அருகே போத்தனூர் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. நேற்று மதியம் போத்தனூரில் இருந்து மூன்று இணைப்பு பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில், 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் சென்றது. சுமார் 45 நிமிடத்தில் பொள்ளாச்சியை வந்தடைந்தது.

அதன்பின், அதே வழித்தடத்தில் கிணத்துக்கடவுக்கு அதிவேக ரயில் இயக்கப்பட்டது. அப்போது, ரயிலில் இருந்த அதிகாரிகள், தண்டவாளத்தின் உறுதி தன்மை மற்றும் அதிர்வு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி வழியாக விரைவு ரயில் இயக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை பயணிகள் ரயில் விரைவில் இயக்கலாம் என தெரிகிறது.

Related Stories:

>