×

மானூர் பெரிய குளத்தில் போதிய நீர் இருப்பு இல்லை 500 ஏக்கர் நெல் பாசனம் கேள்விக்குறியானது-நடவு செய்த விவசாயிகள் கவலை

நெல்லை : நெல்லை அடுத்த மானூரில் உள்ள பெரிய குளத்தில் 60 சதவீதத்திற்கும் குறைந்த அளவிலேயே நீர் இருப்பில் உள்ளது. இதனால் 500 ஏக்கரில் நெல் நடவு செய்த பல கிராம விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தின் மிகப்பெரிய குளம் மானூர் குளமாகும். தென்காசி மாவட்டத்திலுள்ள ராமநதி, கருப்பா நதி, அடவிநயினார் மற்றும் குண்டாறு அணைகளைவிட அதிக நீர் கொள்ளளவு கொண்டது, இந்த குளம். குளத்தின் உயரம் 16 அடி, கரையின் நீளம் 6240 மீ, அதிகபட்ச நீர் கொள்ளளவு 185.77 மில்லியன் கன அடியாக உள்ளது, குளத்தின் மொத்த பரப்பளவு 4,070 மி.ச. மீட்டர்.

இந்த குளத்தில் 4 மடைகளும், 1 மறுகால் 30.80 மீட்டரும் உள்ளது. எட்டான்குளம், மானூர், மாவடி, மதவக்
குறிச்சி ஆகிய 4 பஞ்சாயத்துகளின் நிலப்பரப்பில் பரவி மானூர் பெரியகுளம் அமைந்துள்ளது.  இந்த குளம் ஒரு முறை நிரம்பினால் இப்பகுதி சுற்று வட்டார கிராமத்தினர் 3 போக நெல் நடவு மேற்கொள்வார்கள்.

இந்த குளத்தின் மூலம் நஞ்சை, புஞ்சை மற்றும் வாட்ரேட் அடங்கிய 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு  பாசன வசதி பெறுவதோடு 25 கிராமங்கள் நிலத்தடிநீர் மூலம் கிணற்று பாசனமும் பெறுகின்றன. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி ஓரளவு பெய்தாலும் சில பகுதிகளில் போதிய மழை இல்லை. இதனால் பல குளங்களில் நீர் நிரம்பவில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மானூர் குளத்திற்கு வரும் நீர் பாதைகள் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், மாவட்ட நிர்வாகம் உதவியுடன் சீரமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இதனால் இந்த குளத்திற்கு சிற்றாறு மூலம் தண்ணீர் வந்து சேர்ந்தது. பலபகுதிகளின் மழைநீரும் முழுமையாக கிடைத்ததால் கடந்த ஆண்டு குளம் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் இப்பகுதியில் பாசனப்பணிகள் செழிப்பாக நடந்தன.

நேற்றைய நிலவரப்படி, மானூர் பெரியகுளத்தில் 60 சதவீதத்திற்கும் குறைவான அளவே நீர் இருப்பு உள்ளது. இதை நம்பி மானூர், எட்டாங்குளம், மாவடி, மதவக்குறிச்சி உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பல கிராமத்தினர் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாகவே நெல் நடவு செய்துள்ளனர்.
சுமார் 500 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் நடுவை நடந்துள்ளது. முதல் களையும் பறித்துள்ளனர். ஆனால் குளத்தில் தற்போது இருக்கும் நீர் அடுத்த ஒன்றரை மாதத்திற்கு மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. மொத்தம் 4 மாதத்திற்கு நீர் தேவை உள்ள நிலையில் இனி மழை பெய்யுமா, குளம் நிரம்புமா என்று கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து மானூர் விவசாயிகள் சங்கத்தலைவர் முகம்மது இப்ராகிம் கூறுகையில், கடந்த ஆண்டு இதே நாளில் மானூர் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. தற்போது போதிய நீர் இருப்பில் இல்லை. இந்த குளத்திற்கு தண்ணீர் வரும், இதற்கு முன்பு அமைந்துள்ள விகேபுதூர் உள்ளிட்ட 19 குளங்களும் அரையளவு அல்லது கால் அளவு நீரே நிரம்பியுள்ளன.

 எனவே இனியும் மழை பெய்தாலும் இந்த குளம் நடப்பு பருவத்தில் நிரம்புவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் 500 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல்லிற்கு கடைசி வரை நீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சில விவசாயிகள் 2ம் களை பணியை தொடரவா, வேண்டாமா என்ற எண்ணத்தில் உள்ளனர். எனவே மானூர் குளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Tags : pond ,Manor , Nellai: The large pond at Manor next to Nellai has less than 60 per cent water reserve.
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...