×

இந்தியாவின் சுதந்திர வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் ட்ரோன் கேமராவால் படம் பிடிப்பு:பூங்காவில் பெட்டியை விட்டுவிட்டு ஓட்டம்

வேலூர் : இந்தியாவின் சுதந்திர வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் டிரோன் கேமராவில் படம் பிடித்த மர்மநபர்கள் பூங்காவில் பெட்டியை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்தியாவின் சுதந்திர போராட்டத்துக்கு காரணமாக அமைந்த சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வேலூர் மாநகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில், அருங்காட்சியகம், அரசு அலுவலகங்கள், காவலர் பயிற்சிப்பள்ளி மற்றும் 2 மைதானங்கள் உள்ளது.இந்நிலையில் கோட்டை அகழியையொட்டி அமைந்துள்ள பூங்காவில் தினமும் காலையில் ஏராளமானோர் வாக்கிங் செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை பொதுமக்கள் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோட்டை பூங்காவில் ஒரு மர்மப்பெட்டி கேட்பாரற்று இருந்தது.

இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள், வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பெட்டியை ஆய்வு செய்தனர். அந்த பெட்டி ட்ரோன் கேமரா வைக்கப்படும் பெட்டி என தெரியவந்தது.

மர்ம நபர்கள் யாரோ நேற்று முன்தினம் நள்ளிரவு அல்லது நேற்று அதிகாலையில் அனுமதியின்றி ட்ரோன் கேமரா மூலம் கோட்டையை படம் பிடித்திருக்கலாம் எனவும், பொதுமக்கள் வாக்கிங் வந்தபோது பெட்டியை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கோட்டையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags : Vellore Fort ,park ,India , Vellore: Mysterious people photographed on a drone camera at the Vellore Fort, India's historic independence site
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயில்