×

ஆம்பூர் அருகே மழையிலும் வறண்டு கிடக்கும் ஏரிகள்

ஆம்பூர் : புயல் காரணமாக ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் மழை பெய்தது. இதில் ஆம்பூர் தாலுகாவில் உள்ள பெரியாங்குப்பம் ஏரி, ஆனைமுகன் தடுப்பணை ஆகியவற்றில் அருகிலுள்ள வனப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக கானாறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் நிரம்பின ஆனால், இவற்றிற்கு எதிர்மாறாக பல இடங்களில் உள்ள விவசாய நிலங்களை செழிக்க வைத்த பல ஏரிகள் இந்த தொடர்மழையிலும் நீர் வரத்து இன்றி வறண்ட நிலையில் உள்ளன.

குறிப்பாக தமிழக ஆந்திர எல்லையாக உள்ள துருகம், ஊட்டல், கவுண்டன்யா காடுகளில் பெய்யும் மழையானது கானாறுகள் வழியாக மலைப்பகுதிகளில் இருந்து அருகில் உள்ள தமிழக பகுதிகளை வந்தடைவது வழக்கம். இதில் ஊட்டல் காட்டையொட்டி அமைந்துள்ள மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட பைரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியை ஒட்டி அமைந்துள்ள மேல்மிட்டா ஏரியும் ஒன்று.

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கும் இந்த ஏரி தற்போது நீரின்றி புதர் மண்டி உள்ளது. இந்த ஏரி வாயிலாக மேல்மிட்டாளம், கூர்மாபாளையம், பைரபள்ளி, பந்தேரபல்லி, வன்னியநாதபுரம் உட்பட பல்வேறு கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வந்தன. இந்த ஏரியில் நிரம்பு நீரானது உபரியாகி கானாறுகள் வாயிலாக பெரியவரிக்கம் ஏரியை சென்றடையும் நிலை இருந்து வந்தது. நீர் வரத்து கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும், வனப்பகுதிகளில் இந்த நீர் தடங்கள் அடைபட்டு கிடப்பதாலும் நீர் இந்த ஏரியை வந்தடைவது தடைபட்டுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதே போல் ஆம்பூர் அடுத்த கன்றாம்பல்லியில் உள்ள ஏரியும் இதே அவல நிலை உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த ஏரியில் இருந்து பெறப்படும் நீரால் கன்றாம்பல்லி, மேல் கன்றாம்பல்லி, பெரியவரிக்கம், துத்திபட்டு உட்பட பல்வேறு கிராமங்கள் பயனடைந்து வந்தன. இந்த ஏரிக்கு பைரப்பள்ளி ஏரியில் இருந்தும், அருகில் உள்ள சென்னப்பமலையில் இருந்து பெறப்படும் மழைநீர் கானாறு வழியாக இந்த ஏரிக்கு வருவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரிக்கு நீர் வரும் வழித்தடமும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் உரிய நீர் இந்த ஏரியை வந்தடையாததால் வறண்ட நிலையில்  உள்ளது.

எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஏரிகளுக்கு நீர் வரும் பாதைகளை சீரமைத்து நீர் சென்றடைய வழி வகை செய்ய வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்காயம் அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஆலங்காயம் பகுதியில் உள்ள புல்லானெரி, கோமட்டெரி போன்ற ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இருப்பினும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூவல் குட்டை பகுதியில் அமைந்துள்ள பக்கிரி ஏரியில் புதர் மண்டிய நிலையில் ஒருசொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெயரளவில் அவ்வபோது தூர்வாரும் பணி மேற்கொள்வதாக அதிகாரிகள் ஏரிக்கரையில் பணி செய்துவிட்டு லட்ச கணக்கில் செலவு செய்ததாக போர்டு வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

மேலும் ஏரிக்கு நீர் வரும் பெரும்பாலான கால்வாய்களில் புதர் நிறைந்து காணப்படுவதாலும் ஏரி கால்வாய்ககளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டதாலும் ஏரிகளில் நீர் வரத்து இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : Lakes ,Ambur , Ambur: The storm caused significant rainfall in and around Ambur.
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!