ஒரு கோடி ரூபாய் தரும்படி கேட்டு மாஜி ஊராட்சி தலைவரிடம் வெடிகுண்டுடன் வந்து மிரட்டல்: காரைக்குடி அருகே பட்டப்பகலில் பரபரப்பு

காரைக்குடி: சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடியிடம் ரூ.1 கோடி கேட்டு, வெடிகுண்டை காட்டி மிரட்டியவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கற்பக விநாயகர் தெருவை சேர்ந்தவர் மாங்குடி. சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர். காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர். நேற்று காலை இவர் வீட்டில் இருந்தபோது, தமிழ்தேச மக்கள் கட்சி  அமைப்பை சேர்ந்த தமிழ்குமரன் வந்து, அமைப்பின் வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு மாங்குடி, ‘‘அவ்வளவு தொகை இல்லை’’ என கூறினார். உடனே பையில் இருந்த பைப் வெடிகுண்டை எடுத்து டேபிள் மீது வைத்து ‘பணம் தராவிட்டால் ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டேன்’ என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாங்குடி, நைசாக வெளியே வந்து கட்சிக்காரர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து தமிழ்குமரனை பிடித்து பையில் இருந்த டைம் செட் செய்யப்பட்ட பைப் வெடிகுண்டு, சணல் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு மற்றும் 2 கத்திகளை கைப்பற்றினர்.

 இதுபற்றிய புகாரின்படி காரைக்குடி வடக்கு போலீசார் வந்து, தமிழ்குமரனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால், அவரிடம் விசாரணை நடத்தினார். காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ‘‘தமிழ்குமரன் தடை செய்யப்பட்ட  தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர். இவரை முறையாக  கண்காணிக்காததால் பையில் வெடிகுண்டு மற்றும் கத்தியுடன் உலா வந்துள்ளார்.  இதுபோன்று நகரில் முக்கிய விஐபிக்களிடம் தொடர்ந்து மிரட்டி பணம் வாங்குவதை  வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது’’ என்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: காரைக்குடியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், ‘‘இதுபோன்ற அமைப்பை போலீசார் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதையே இது காட்டுகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக செயல்பட்டும் போலீசார் ஏன் கண்காணிக்கவில்லை என தெரியவில்லை. பைப் வெடி குண்டு, நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் எப்படி வெளியே சுற்றி வந்தார் என தெரியவில்லை. போலீசார் அஜாக்கிரதையாலேயே இவர்கள் சுதந்திரமாக உலா வந்துள்ளனர். தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல உள்ளேன்’’ என்றார்.

ப.சிதம்பரம் வீட்டில் குண்டு வீசிய அமைப்பு?

மாங்குடி கூறுகையில், ‘‘தனது அமைப்புக்கு ஒரு கோடி தராவிட்டால் தேர்தல் முன்விரோதம் உள்ளதால், உங்களை போட்டு தள்ளிவிட்டு அவர்களிடம் பணம் வாங்கிக் கொள்ளவா’’ என மிரட்டினார்.  ‘‘முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் வீட்டில் வெடிகுண்டு வீசியது எங்கள் அமைப்புதான்’’ என்றார். எனக்கும் எனது குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து உள்ளது. போலீசார் உரிய விசாரணை செய்து பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>