திருவண்ணாமலையில் நாளை மறுதினம் குபேர கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 14 கி.மீ தொலைவுள்ள கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. இதில் 7வது சன்னதியாக குபேர லிங்கம் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று பிரதோஷ  காலத்தில் குபேர லிங்கத்தை வழிபட்டு, கிரிவலம் சென்றால், வறுமை நீங்கி வளம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்தாண்டு குபேர கிரிவலம் செல்ல உகந்த நாள் வரும் 13ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், லட்சக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், குபேர கிரிவலம் செல்ல கலெக்டர் சந்தீப் நந்தூரி தடை விதித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக குபேர லிங்கம் தரிசனம் மற்றும் கிரிவலம் செல்வதற்கு தடை  விதிக்கப்படுகிறது. கோயில் சார்பில் குபேர லிங்க சன்னதியில் வரும் 13ம் தேதி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மகா தீப கொப்பரை திரும்பியது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்தையொட்டி கடந்த மாதம் 29ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் நேற்று முன்தினம் இரவு வரை  காட்சியளித்தது. தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை நேற்று காலை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கை சுமையாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிலிருந்து பெறப்படும் தீபச்சுடர் பிரசாதம் (தீப மை),  ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பிறகு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.

Related Stories: