×

மாளந்தூர் - சென்னங்காரணி இடையே ஆரணியற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் - சென்னங்காரணி கிராமங்கள் இடையே ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர், கல்பட்டு, ஆவாஜிப்பேட்டை ஆகிய கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவ, மாணவிகள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில், விவசாயிகள் ஆற்றின் மற்றொரு கரையோரத்தின் பகுதியில் நெல், பூ செடிகள் ஆகியவைகளை பயிர் செய்துள்ளனர். மேலும், தற்போது நிவர் மற்றும் புரெவி  புயல்  காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி தண்ணீர் நிரம்பி திறக்கப்பட்டதால், ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாளந்தூர் விவசாயிகள் தாங்கள் வைத்த பயிர்களை விவசாயம் செய்ய  மற்றொரு கரைக்கு செல்ல 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர்.

எனவே, இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாளந்தூர் பகுதியில் உள்ள ஆரணியாற்றின் குறுக்கே மாளந்தூர் - சென்னங்காரணி இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த வருடமே திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு  கொடுத்தனர்.  ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, ‘மாளந்தூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளோம். எங்களது நிலம் ஆற்றின் மற்றொரு கரையோரம் உள்ளது.  இதை நாங்கள் பார்க்க செல்ல முடியவில்லை. ஏனென்றால், தற்போது ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. எங்களால் அக்கரைக்கு சென்று எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யமுடியவில்லை. பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம்  என 30 கிலோ மீட்டர் தூரம்  சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, எங்கள் கிராமத்திற்கும் (மாளந்தூர்) சென்னங்காரணிக்கும் இடையே  தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கூறினர்.

Tags : ground bridge ,Malandur - Chennankarani ,forest , Malandur - Chennankarani ground bridge to be built in the forest: Farmers demand
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு