×

இந்தியா - இங்கிலாந்து தொடர் சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகள்: அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட்

அகமதாபாத்: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், ஒரு பகலிரவு உட்பட 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன. குஜராத் மாநிலம்,  அகமதாபாத்தில் உள்ள மோடிரா கிரிக்கெட் அரங்கம், உலகில் மிகப்பெரிய அரங்கமாகும். இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. கொரோனா பீதிக்கு இடையில்  அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்த அரங்கை   பிப்.24ம் தேதி தொடங்கி வைத்தார். கொரோனா பீதி குறையததால் இந்த அரங்கில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த அரங்கில் நேற்று  ‘இண்டோர் கிரிக்கெட் அகடமி’யை  பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா தொடங்கி வைத்தார். அப்போது அவர், ‘பிப்.24ம் தேதி இந்த அரங்கில்  இந்தியா-இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி  தொடங்கும்’ என்று அறிவித்தார். ்அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டித் தொடர் அட்டவணையை ஜெய் ஷா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ டாம் ஹாரிசன் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி  இந்தியா-இங்கிலாந்து இடையே  4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இங்கு கடைசியாக 2016ம் ஆண்டு இந்தியா-இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடந்தது. அதன்பிறகு டெஸ்ட் போட்டிகள் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க இருக்கின்றன. மேலும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள்  அகமதாபாத்தில் நடைபெறும். அதில் 3வது டெஸ்ட் பகலிரவு போட்டியாகவும், இளஞ்சிவப்பு பந்தை பயன்படுத்தியும் நடைபெறும். இதே அரங்கில் டி20 போட்டிகள் அனைத்தும் நடக்கும். அதேபோல் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் பூனேவில் நடக்கும். போட்டிகளை பார்க்க ரசிகர்கள் அனுமதிப்பது குறித்து இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ‘இரு அணி  வீரர்களும் உயர் பாதுகாப்பு வளையத்தில் வைத்து பாதுகாக்கப்படுவார்கள்’ என்று ஜெய் ஷா, டாம் ஹாரிசன் ஆகியோர் தெரிவித்தனர். கொரோனா பீதி காரணமாக மார்ச் மாதம் இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டித் தொடர் கைவிடப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடராக இந்தியா-இங்கிலாந்து தொடர் இருக்கும்.

போட்டி அட்டவணை
டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட்                        பிப்.5-9                      சென்னை
2வது டெஸ்ட்                        பிப்.13-17    சென்னை
3வது டெஸ்ட்(பகலிரவு)      பிப்.24-28           அகமதாபாத்
4வது டெஸ்ட்                       மார்ச் 4-8                      அகமதாபாத்

டி20 தொடர்
மொத்தம் 5 டி20 போட்டிகள். எல்லா  போட்டிகளும்  மார்ச் 12, 14, 16, 18, 20 தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறும்.

ஒருநாள் தொடர்
மொத்தம் 3 ஆட்டங்கள். இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் மார்ச் 23, 26, 28 தேதிகளில்  பூனேவில் மட்டும் நடக்கும்.

Tags : England ,India ,Test matches ,Test ,Chennai ,Ahmedabad , India - England series 2 Tests in Chennai: Day and night Test in Ahmedabad
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...