×

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் சைதாப்பேட்டை சிறையில் திடீர் சாவு: போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு; மருத்துவமனை முன் மனைவி போராட்டம்

சென்னை: சென்னை காமராஜர் சாலை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (38). ஆட்டோ டிரைவரான இவரை, கடந்த 6ம் தேதி கஞ்சா கடத்திய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் சைதாப்பேட்டை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் நேற்று காலை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த சிறை காவலர்கள் மகாலிங்கத்தை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டிரைவரின் மனைவி பிரபா (34). தனது மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்பு ‘எனது கணவரின் இறப்பில் மர்மம் உள்ளது’ என்று கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் சமாதானம் செய்தனர். ஆனால் பிரபா எனது கணவரை போலீசார் விசாரணையின் போது அடித்ததால் தான் இறந்துள்ளார். கடந்த 6ம் தேதி எனது கணவரை போலீசார் கைது செய்யும் போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருந்தார். திடீரென அவர் இறந்து விட்டதாக கூறுவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார்.

அதைதொடர்ந்து பிரபா தனது 3 குழந்தைகளுடன் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில், எனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளது. போலீசார் தாக்கியதால் தான் இறந்துள்ளார். எனவே பிரேத பரிசோதனையின் போது எனது தரப்பு டாக்டர் ஒருவரை அனுமதிக்க வேண்டும். உண்மை நிலையை கண்டறிய பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவும், எனது வழக்கறிஞரை அனுமதி வழங்க வேண்டும். கணவரை கைது செய்ய போலீசார் மீது கொலை வழக்கில் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்துள்ளார். கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Auto driver ,Saidapet ,jail ,hospital ,struggle , Auto driver Saidapet arrested in cannabis case dies in jail Wife struggle in front of hospital
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...