நம் வரலாற்றில் ஒரு பொன்னான நாள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு அமித்ஷா டுவிட்டரில் வாழ்த்து.!!!

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டித்தில்  போதிய இடவசதி இல்லை. அதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்தின் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம்  கோர்ட், கட்டுமான பணிக்கு தடை விதித்தது. பூமி பூஜை நடத்தலாம்’ என்று அனுமதி அளித்தது. அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பகல் 1 மணிக்கு நடந்தது.

பிரதமர் மோடி, புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜையை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, மாநிலங்களவை துணைத் தலைவர்  ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். சில மாநில கவர்னர்கள், முதல்வர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

இந்நிலையில், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  அமித்ஷா, புதிய பாராளுமன்ற மாளிகையின் அடிக்கல் நம் வரலாற்றில் ஒரு பொன்னான நாள், இந்த புகழ்பெற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன்.

பாராளுமன்ற மாளிகை நமது ஜனநாயகத்தின் நம்பிக்கை மையமாகும், இது சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் அதன் போராட்டத்தை நினைவூட்டுகிறது, மேலும் தேசிய சேவைக்கு நம்மை ஊக்குவிக்கிறது. புதிய பாராளுமன்ற மாளிகை  தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் அடையாளமாக இருக்கும், இது நாட்டு மக்களின் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றும் மையமாக மாறும். நாட்டின் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் மோடி அரசு முழு பக்தியிலும் அர்ப்பணிப்பிலும் ஈடுபட்டுள்ளது, இந்த தீர்மானத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இந்த புதிய நாடாளுமன்ற சபை ஒரு சாட்சியாக இருக்கும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>