×

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது: ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மாஸ்கோ: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு, தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக முதலில் ரஷ்யா அறிவித்தது. தொடர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளோம் என்று அறிவித்தன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர், தங்களது கண்டுபிடிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி, தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்பட உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் கொரோனா தடுப்பூசியை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இங்கிலாந்தில் நேற்று மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட பின்னர், அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘21 நாட்கள் இடைவெளியில் ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பு மருந்தை 2 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த 21 நாட்களும், 2வது முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அடுத்த 42 நாட்களும் மது அருந்தக் கூடாது. மது அருந்தினால், தடுப்பு மருந்து வேலை செய்யாது. மேலும் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

எங்களது தடுப்பு மருந்து மட்டுமல்ல, மற்ற நாடுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ள தடுப்பு மருந்துகளுக்கும் இது பொருந்தும்’’ என்று தெரிவித்துள்ளனர். உலகில் அதிகமாக மது அருந்துபவர்களின் நாடுகளில் ரஷ்யா 4ம் இடத்தில் உள்ளது. இதனால் அங்குள்ள மதுப்பிரியர்களுக்கு இந்த எச்சரிக்கை நிச்சயம் அதிர்ச்சிகரமான ஒன்றுதான் என்று அந்நாட்டு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் சிலர் கூறுகையில், ‘‘தற்போது கடும் குளிர்காலம். இதனால் மது விற்பனை அதிகமாக உள்ளது. 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என்ற எச்சரிக்கையை, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் அலட்சியப்படுத்தி விடக் கூடாது. பொதுவாக 2 மாதம் முற்றிலும் குடிக்காமல் இருந்தால், அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

Tags : scientists ,Russian , Do not drink alcohol for 2 months after corona vaccination: Russian scientists warn
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த...