×

பார்திவ் படேல் திடீர் ஓய்வு...தேவ்தத் படிக்கல் காரணம்?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்திவ் படேல் ஓய்வு பெறுவதற்கு தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான் காரணமா? என கருதப்படுகிறது.2002ஆம் ஆண்டு இந்திய அணிக்கு 17 வயதில் அறிமுகமான பார்திவ் படேல், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பார்திவ், 31.13 சராசரியுடன் 934  ரன்களும், 38 ஒருநாள், 2 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடைசியாக 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றார். தற்போது, தனது ஓய்வு முடிவை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

அதில், “எனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையை இன்றுடன் முடித்துக்கொள்கிறேன். நான் 17 வயதாக இருந்தபோது பிசிசிஐ என்மீது முழு நம்பிக்கை வைத்து இந்திய அணியில் இணைத்தது. இதற்காக அவர்களுக்கு மனதார நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறேன். எனது கிரிக்கெட் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தார்களுக்கும், குஜராத் கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். பார்திவ் படேல் இதுவரை 194 உள்ளூர் முதல் தரப்போட்டிகளில் பங்கேற்று 67 அரைசதம், 27 சதங்களுடன் 11,000 ரன்களைக் கடந்துள்ளார். 2016-17ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் குஜராத் அணியை வழிநடத்தி முதல் முறையாக  கோப்பை வென்று கொடுத்தார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

13வது சீசனில் ஆர்சிபி அணியில் இடம்பெற்ற இவர், ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. காரணம், பார்திவுக்கு மாற்றாகப் பார்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதுதான்.  ஒருவேளை தேவ்தத் படிக்கல் சொதப்பலாக விளையாடியிருந்தால் பார்திவ் படேலுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அதன்மூலம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருக்கலாம்.

ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த விரக்தியின் காரணமாகக் கூட பார்திவ் படேல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய  நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Parthiv Patel , Parthiv Patel's sudden retirement ... the reason for Devdhat Padikkal?
× RELATED சச்சின் 10 வருடங்களில் செய்ததை...