சிந்து சமவெளி நாகரிகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம்!: பழங்கால மண்பாண்டங்களில் படிந்த உயிரி எச்சங்கள் மீதான ஆய்வில் உறுதி..!!

சென்னை: 4,600 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த சிந்து சமவெளி நாகரிக மக்களின் உணவு பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப உணவாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை அவர்கள் அதிகம் உண்டதாக வரலாற்று ஆய்வு ஒன்று தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலகட்டத்தை சேர்ந்த மண்பாண்டங்களில் கால்நடைகள் மற்றும் மாட்டின் கொழுப்பு படிமம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜேர்னல் ஆஃப் ஆர்கியாலஜி சயின்ஸ் இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த மண்பாண்டங்களில் படிந்திருந்த உயிரி எச்சங்களை சோதனைக்கு உட்படுத்திய போது இதில் இருப்பது பன்றி மற்றும் அசைபோடும் விலங்கினங்களான மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சி என்பது கண்டறியப்பட்டது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான அக்சயத்தா சூர்யநாராயணன் என்பவரின் வடமேற்கு இந்தியாவின் சிந்து நாகரிகத்தில் இருந்த மண்பாண்டங்களில் கொழுப்பின் எச்சங்கள் என்ற ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 4,600 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த 7 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஏராளமான விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. அதில் 50 முதல் 60 விழுக்காடு எலும்புகள் மாட்டின் எலும்புகள் என்பதும் ஆய்வில் உறுதியாகியிருக்கிறது. எனவே சிந்து சமவெளி நாகரிக மக்களிடையே மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கலாச்சாரமாக இருந்துள்ளதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியிருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: