×

ஊரடங்கு கால ஹீரோவுக்கு அங்கீகாரம் : உலகின் சிறந்த 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் நடிகர் சோனு சூட்-க்கு முதலிடம்

மும்பை : சிறந்த 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் நடிகர் சோனு சூட்-க்கு முதலிடம் கிடைத்துள்ளது.  ஊரடங்கினால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோரை அவரவர் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைத்து உதவி செய்தவர் நடிகர் சோனு சூட். தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களையும், விமானம் ஏற்பாடு செய்து அழைத்து வந்தார். தொடர்ந்து பல்வேறு நல உதவிகளைச் செய்து வரும் சோனு சூட் தற்போது பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க புதிய திட்டத்தைத் துவக்கினார்.

மேலும்  ஏழை விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கி கொடுப்பது, மலைக்கிராம மாணவர்களின் ஆன்லைன் படிப்பிற்கு ஏதுவாக செல்போன் டவர் அமைத்து கொடுப்பது, அறுவை சிகிச்சை உதவிக்கு பணம் தேவைப்படுவோருக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக நீங்கா இடம் பிடித்தவர். அண்மையில் ஏழை எளியோருக்கும் தேவைப்படுவோருக்கும் உதவ இந்தி நடிகர் சோனு சூட் ரூ.10 கோடி நிதி திரட்ட தனது சொந்தமான 8 சொத்துகளை அடமானம் வைத்துள்ளார். ஏழை மக்களுக்கு உதவ தான் சம்பாதித்து வாங்கிய சொத்துகளையே அடமானம் வைத்த சோனு சூட்டின் செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், ஊரடங்கு கால ஹீரோவான சோனு சூட்டிற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. லண்டனைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ நாளிதழ் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் சோனு சூட்டிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா 6வது இடத்திலும் நடிகர் பிரபாஸ் 7வது இடத்திலும் உள்ளனர். இதைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா பரவலின் போது, எந்நாட்டு மக்களுக்கு உதவ வேண்டியது என்னுடைய கடமை என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு இந்தியனாக நான் என்னுடைய கடமையைத் தான் செய்தேன். என்னுடைய கடைசி மூச்சு வரை  இதனை நிறுத்த மாட்டேன், எனத் தெரிவித்துள்ளார். 


Tags : world ,Recognition for Curfew Hero: Actor Sonu Sood ,celebrities ,Asian , List of Asian celebrities, actor Sonu Sood, topped
× RELATED சென்னை விமானநிலையத்தில் உற்சாக...