×

கோத்தகிரியில் தேயிலை தோட்ட கிணற்றில் சிறுத்தை, குரங்கு சடலம் மீட்பு

ஊட்டி: கோத்தகிரி அருகேயுள்ள தனியார் தேயிலை தோட்ட கிணற்றில் இருந்து பெண் சிறுத்தை மற்றும் குரங்கின் சடலத்தை வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர் மட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்ட கிணற்றில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்று, கிணற்றில் இறந்து கிடந்த 4 வயது பெண் சிறுத்தையின் உடலை வலை மூலம் மீட்டு பிரதே பரிசோதனை மேற்கொண்டனர்.

அதே கிணற்றில் இருந்து ஒரு குரங்கின் சடலத்தையும் மீட்டனர். சிறுத்தை குரங்கை விரட்டி வந்தபோது, சிறுத்தையும் குரங்கும் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுத்தையின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகள், சிறுத்தை, கரடி மற்றும் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளன.

இவைகள் வனத்தையொட்டி மக்கள் வாழும் பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களிலேயே அதிகம் உலா வருகின்றன. இவைகள், கால்நடைகள், கோழி மற்றும் நாய்கள் போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவதற்காக வரும் போது, மனித விலங்கு மோதல் ஏற்படுகிறது. சில சமயங்களில் உணவிற்காக கால்நடைகள் மற்றும் விலங்குகளை விரட்டி வரும் போது கிணற்றில் தவறி விழுந்து இறக்கின்றன, என்றனர்.

Tags : tea garden ,Kotagiri , Leopard, monkey
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்