×

கடந்த 2000 முதல் 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் பாம்பு கடித்து 12 லட்சம் பேர் பலி : வாஷிங்டன் பல்கலை ஆய்வில் தகவல்

வாஷிங்டன், : கடந்த 2000 முதல் 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் பாம்பு கடித்து 12 லட்சம் பேர் பலியானதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய காணொலி மாநாட்டில் இந்தியாவில் பாம்பு கடித்தல் குறித்த அறிக்கையை வெளியிட்டனர். அதில், ‘இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் 1.25 லட்சம் பேர் வரை பாம்பு கடியால் இறக்கின்றனர். உலகின் மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் மட்டுமே இறக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் பாம்பு கடித்தால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை 81,000 முதல் 1,38,000 பேராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாம்பு கடித்ததால் ஏற்படும் இறப்புகள் மற்றும் அதன் பின்னர் உடலில் ஏற்படும் பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கடந்த 2000 முதல் 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் 1.2 மில்லியன் (12  லட்சம்) பேர் பாம்பு கடியால் இறந்துள்ளனர்.

அதாவது சராசரியாக ஆண்டுக்கு  58,000 பேர் இறக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் 30 - 69  வயதுடையவர்கள். கால் பகுதியினர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்தியாவில் 300 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் குறைந்தது 60 இனங்கள் மிகவும் விஷம் கொண்டவை.  பீகார்,  ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலங்கானா,  ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் விவசாயப் பகுதிகளில் வாழும்  மக்கள் பாதிக்கின்றனர். இவர்களில் மொத்த இறப்பில் 70 சதவீதம் பேர் உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச அளவில் பிரபலமான ‘நேச்சர்’ இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. மேலும், ‘ஸ்னேக் பைட்’ என்பது ஏழைகளின் நோயாகும் என்றும், புறக்கணிக்கப்பட்ட நோயாக உள்ளதாக கூறியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புறக்கணிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் பாம்பு கடி சேர்க்கப்பட்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் பாம்பு கடியைக் குறைக்க சர்வதேச அளிவில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

குளோபல் ஹெல்த் டொராண்டோ மையத்தின் இயக்குனர் பிரபாத் ஜா வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் அனைத்து இறப்புகளும், பாம்பு கடித்த வழக்குகளாக பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில், இந்தியாவில் அதற்காக தீவிர சிகிச்சை வசதிகள் இல்லை. குறிப்பிட்ட சில இடங்களில்தான் வசதிகள் உள்ளன. பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் சிகிச்சை கிடைக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டில் இந்தியாவில் பாம்பு கடியால் 45,900 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு, 52 ஆயிரம் பேர் பலியாகினர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைசூர் பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் கெம்பியா கெம்பராஜு கூறுகையில், ‘நாட்டில் பாம்பு கடித்த சம்பவ தடுப்பு நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில், இது ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பிரச்னை என்பதேயாகும்’ என்றார்.

Tags : India ,Washington University , Snake, Washington, University, study, information
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...