போதிய ஆடுகளம் இல்லாததால் பாதியில் விளையாட்டை விடும் வீரர்கள்: குமரியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இருந்து பல திறமையான விளையாட்டு வீரர்களை இந்த நாடு அறிந்துள்ளது. அதுபோல் பல திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்தில் கபடி, கால்பந்து, தடகளம், வாலிபால், கைப்பந்து என பல விளையாட்டுகளில் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல தேசிய போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மூத்தோர் தடகளபோட்டியிலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பலர் சர்வதேசபோட்டியில் பங்கேற்று தங்கபதக்கங்களை பெற்றுள்ளனர். குறிப்பாக குமரி மாவட்ட மக்களிடம் விளையாட்டு திறமைகள் ஒழிந்து கொண்டு இருக்கிறது. சரியான பயிற்சி மற்றும் அதற்கான ஆடுகளங்கள் அமைந்தால் அவர்கள் ெபரிய வீரர்கள், வீரங்கனைகளாக வெளியே வருவார்கள். மாவட்டத்தில் அனைத்து கிராமபகுதிகளிலும் கபடி விளையாடி வருகின்றனர்.

திறமையான பல வீரர்கள் இந்திய கபடி அணிக்காக தங்களது பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இந்திய கபடி அணியின் முதல் கேப்டனாக குமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜரத்தினம் வழிநடத்தி இந்திய கபடி அணியை உலகிற்கு தெரியப்படுத்தினார். அதனை தொடர்ந்து இந்திய கபடி அணிக்கு ஜீவகுமார் விளையாடி குமரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் பல வீரர், வீராங்கனைகள் தயார் நிலையில் உள்ளனர். இதுபோல் தடகளபோட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை இந்திய அணிக்காக விளையாடி 3 முறை தங்கபதக்கம் பெற்றது மட்டுமல்லாமல் தேசிய சாதனையும் படைத்துள்ளார். அவரை போன்று குண்டு எறிதல் போட்டியில் என்.லதா என்ற வீராங்கனையும் 3 முறை தேசிய போட்டியில் தங்கம் பெற்று குமரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் திறமையான உலகதரம் வாய்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக கடற்கரை கிராமமான தூத்தூர், வள்ளவிளை உள்பட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த வீரர்கள் இந்திய அணிக்காவும், வெளிநாட்டில் உள்ள கிளப் அணிக்காகவும் தேர்வு பெற்று விளையாடி குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். விளையாட்டை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. அதில் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு இந்திய அணிக்கு தேர்வு செய்து வருகின்றனர். அதுபோல் கபடியில் புரோ கபடி போட்டிகள் வருடம் தோறும் நடத்தப்பட்டு உள்ளூர் கபடி வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டு வருகிறது. புரோ கபடி போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜீவகுமார், ரஞ்சித் உள்பட 12 வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.

இதுபோல் கால்பந்து போட்டியும் இந்தியன் சூப்பர் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா உள்பட பல்வேறு அணிகளுக்காக குமரி மாவட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர். இறகுபந்து போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கைப்பந்து போட்டியும் நடத்துவதற்கு இந்தியன் கைப்பந்து கழகம் முயற்சி செய்து வருகிறது. இப்படி பல்வேறு விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை வெளிகாட்டி வரும் ஒரு சில வீரர்கள் குமரி மாவட்டத்தில் உருவாகி வரும் நிலையில் திறமை இருந்தும் போதிய மைதானங்கள் குமரி மாவட்டத்தில் இல்லாததால் பல விளையாட்டு வீரர்கள் விளையாட்டை பாதிவில் விட்டு வேறு வேலைகளுக்கு செல்லும் நிலையும் இருந்து வருகிறது.

நாகர்கோவில் அண்ணாவிளையாட்டு மைதானத்தில் 400 மீட்டர் ஓடுதளம் மற்றும் கால்பந்து மைதானம், கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் தடகளபோட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக மைதானம் உள்ளது. ஆனால் ஹாக்கி, ஹெண்ட்பால், டென்னிஸ், கொக்கோ உள்ளிட்ட போட்டிகள் நடத்த வேறு மைதானத்தை அணுக வேண்டியுள்ளது. அரசு சார்பில் கோணம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்துள்ளது. அந்த உள்விளையாட்டு அரங்கத்தில் இறகுபந்து போட்டிகள் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மைதானம் அமைப்பதற்கு போதிய அளவு இடவசதி இல்லை என காரணம் கூறப்பட்டு வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது குமரி மாவட்டத்திற்கு சாய்சப்சென்டர் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக ராஜாக்கமங்கலம் பகுதியில் சுமார் 52 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சில நிர்வாக பிரச்னையால் இந்த மையம் தற்போது வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் சாய்சப்சென்டருக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இறால் பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சாய்சப்சென்டர் அமைந்து இருந்தால் சர்வதேச வீரர், வீராங்கனைகள் இங்கு விளையாட வருவார்கள். மேலும் சர்வதேச போட்டிகளும் நடத்த வாய்ப்பாக இருந்து இருக்கும். இதற்கு காரணம் குமரி மாவட்டத்தின் அருகே கேரள மாநிலம் அமைந்துள்ளது. இங்கு திருவனந்தபுரத்தில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.

மேலும் குமரியில் நட்சத்திர ஓட்டல்கள் பல உள்ளன. இதனால் சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் வருவதற்கு எல்லா வாய்ப்பும் இருந்தும் குமரி மாவட்டத்தில் இருந்து சாய்சப்சென்டர் கைநழுவி போனது குமரி மாவட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பெரிய ஏமாற்றமாகும். பல விளையாட்டு வீரர்கள் உருவாகுவதில் தடைக்கல்லாய் அமைந்தது. குமரி மாவட்டத்தில் கபடிபோட்டிகளில் அளத்தங்கரை, திருனைநார்குறிச்சி, காணிமடம், அழகப்பபுரம், சாத்தான்விளை, மங்காவிளை, மூலச்சல் உள்பட பல அணிகள் தங்களது ஆளுமையை நிலைநிறுத்தி வருகிறது.

இந்த அணிகளில் பல வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முன்னாள் வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். விளையாட்டுகளில் திறமையான பல வீரர், வீராங்கனைகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பையும் பெற்று வருகின்றனர். அளத்தக்கரையில் கபடிக்கு என்று பயிற்சி மேற்கொள்ள பல்வேறு மைதானங்களை வடிவமைத்துள்ளனர். இதுபோல் தமிழக அரசு உள்விளையாட்டு அரங்கு அமைத்துக்கொடுத்துள்ளது. இந்த உள்விளையாட்டு அரங்கிலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறிய மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளை மாவட்டத்தில் பல கிராமங்களில் உள்ள இளைஞர்கள் தங்கள் பகுதியில் சிறிய இடத்தை மைதானமாக ஆக்கி விளையாடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் சர்வதேச தரம்வாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்க ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் கட்டாயம் தேவையாக உள்ளது. அஞ்சுகிராமம் பேரூராட்சி பகுதியில் உள்ள காணிமடம் ரஸ்தாகாட்டில் பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>