வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தொடர் மழை பெய்தும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் 44 ஏரிகளில் சொட்டு தண்ணீர் இல்லை

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தும் 44 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. 137 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மேற்கு பருவமழை காலங்களில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகளவு மழை பெய்யும். வடகிழக்கு பருவ மழையின்போது தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் ஆண்டின் சாரசரி மழையளவில் பாதிக்கு மேல் மழை பதிவாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பதிவானது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 971.6 மி.மீட்டராகும்.

தற்போது, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆண்டு சராசரி மழை அளவை கணக்கிட வைக்கப்பட்டுள்ள மழைமானி கருவி கடந்த ஆண்டுகளில் பதிவான மழை அளவு வைத்து சராசரி மழை அளவு கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்தாண்டு கடந்த 26ம் தேதி நிவர் புயலால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. பலத்த மழையால் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை நிரம்பியது. இதனால் 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

மேலும், ஆந்திராவில் உள்ள அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் பொன்னையாற்றில் வந்து பாலாற்றில் கலந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏரிகள், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் பலத்த மழையால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 137 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் 101 ஏரிகளில் 30 ஏரிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 6 ஏரிகளும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 101 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 519 ஏரிகளில் 137 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், 44 ஏரிகளில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. 174 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. அதேபோல் மோர்தானா அணை தனது மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. ராஜாதோப்பு அணை தனது மொத்த கொள்ளளவான 24.57 அடியில் 20 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அணையான ஆண்டியப்பனூர் அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான ஏரிகள், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருப்பதே ஏரிகளில் தண்ணீர் நிரம்பாமல் இருக்க காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>