×

சின்னசேலம் ஏரிக்கரையில் 700 ஆண்டு பழமையான கொற்றவை சிலை கண்டெடுப்பு

சின்னசேலம்: சின்னசேலம் ஏரிக்கரையில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிலை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினர் பழங்கால கோயில்கள் மற்றும் கல்வெட்டு, சிலைகளை ஆய்வு செய்து வந்தனர். அப்போது சின்னசேலம் ஏரிக்கரையின் கிழக்கு பகுதியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறும்போது, கொற்றவை என்பது ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உள்ளன. மதுரை காண்டத்தின் இரண்டாவது கதையான வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் விரிவாக கூறி உள்ளார். அதாவது கானகத்தில் வசித்த வேட்டுவர்கள் வேட்டைக்கு செல்லுமுன் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டு சென்றுள்ளனர். பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளதாக கூறுகின்றனர். துர்க்கை, காளி என்ற பெயரிலும் கொற்றவையை வழிபட்டனர்.

பெரும்பாலும் ஏரி, ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகளின் அருகிலேயே கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 13ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட வாணகோவராயன் என்ற மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. சின்னசேலம் ஏரிக்கரையின் கிழக்கு பகுதியில் உள்ள கொற்றவை சிற்பத்தை உள்ளூர் மக்கள் முறையாக வழிபடவில்லை. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்தால் இன்னும் பல சிற்பங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags : Chinnasalem Lake , Statue Kotravai
× RELATED சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர் வர பொதுப்பணித்துறை நடவடிக்கை தேவை