×

அந்தியூரில் கிடைத்த முதுமக்கள் தாழி 1500 ஆண்டு பழமையானதாக இருக்கலாம்

அந்தியூர்: அந்தியூர் அருகே கிடைத்த முதுமக்கள் தாழி, 1500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம், என்றும் தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின் உண்மையான காலத்தை அறிய முடியும் என ஈரோடு அருங்காட்சியக காப்பாச்சியர் ஜென்சி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொசக்கவுண்டனூர் பகுதியில் சாலையை சீரமைத்து மழை நீர் வடிகாலுக்கான கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வடிகாலுக்கான கால்வாய் அமைத்திட மொசக்கவுண்டனூரில் பள்ளம் தோண்டப்பட்டபோது, குழியில் இருந்து மண்ணால் ஆன பானைகள், சின்ன மண் சொப்புகள் மற்றும் மக்கிப் போன எலும்புகள் கிடைத்தன.

இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், சம்பவயிடத்துக்கு சென்று, மண்ணுக்குள் கிடைத்த பானை மற்றும் எலும்புகளை பார்வையிட்டனர். மேலும் தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில், ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாச்சியர் ஜென்சி நேரில் சென்று மண்ணுக்குள் இருந்தது முதுமக்கள் தாழியா? என நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மேலும் சில மண்பானைகள் மற்றும் மண் சொப்புகள் கிடைத்தது.

இது தொடர்பாக காப்பாச்சியர் ஜென்சி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இங்கு கிடைத்த மண்பானை மற்றும் எலும்புத் துகள்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழியாக இருக்கலாம். ஆனால், தொல்லியல் துறையினரின் முழுமையான ஆய்வுக்கு பின் உண்மை காலங்களை கண்டறிய முடியும். அப்போது, மண்பாண்டங்கள் மற்றும் எலும்புத் துகள்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பே வீடுகள் கட்டுவதற்கு இப்பகுதிகளில் குழி தோண்டியபோது, இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. பழங்கால மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் கொடுமணலில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகள் போன்று, இங்கும் ஆராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : Anthiyur , Anthiyur
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு