×

யாரும் யாருக்கும் அடிமையில்லீங்க...! டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம்

நெல்லை: 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழு மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை ஐநா சபையில் சமர்ப்பித்தது. இந்தப் பிரகடனத்துக்கு 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐநா சபையில் 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், பால், மொழி, ஜாதி, மதம், அரசியல், பிறப்பு, சொத்து என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும். மனித உரிமை மீறல் குறித்த புகார்களை அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைய வழி புகார் தெரிவிக்கும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் உடனடி சேவையைப் பெறுவதற்கு 14433 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.

Tags : No one ,anyone ,International Human Rights Day , No one is addicted to anyone ...! December 10 is International Human Rights Day
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...