முதல் டெஸ்டில் வார்னர் இல்லை

சிட்னி: இந்திய அணியுடன் அடிலெய்டில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸி. அணி தொடக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. எனினும், அடுத்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி (பகல்/இரவு) அடிலெய்டில் டிச. 17ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வார்னர், இந்த போட்டியில் விளையாட மாட்டார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. இது குறித்து வார்னர் கூறுகையில், ‘காயம் நன்கு குணமாகி வருகிறது. அதே சமயம் டெஸ்ட் போட்டியின் சவாலை எதிர்கொள்ளும் அளவுக்கு முழுமையாகத் தயாராகவில்லை. பேட்டிங், பீல்டிங்கில் 100 சதவீத பங்களிப்பை அளிக்கும் அளவுக்கு உடல்தகுதி இருந்தால் மட்டுமே களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன். மெல்போர்னில் டிச. 26ம் தேதி தொடங் உள்ள பாக்சிங் டே டெஸ்டில் விளையாட முடியும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்தியா லெவன் - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்திய வீரர்கள் முதல் டெஸ்டுக்கு தயாராகும் வகையில் இப்போட்டி பகல்/இரவு அடிப்படையில் நடத்தப்படுகிறது.

Related Stories:

>