×

கிரிக்கெட்டில் இருந்து பார்திவ் படேல் ஓய்வு

புதுடெல்லி: அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் பார்திவ் படேல் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பார்திவ் படேல் (35 வயது), இங்கிலாந்து அணிக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் (2002, ஆக. 8-12) 17 வயது சிறுவனாக அறிமுகமானார். சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக முத்திரை பதித்த அவர், இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டியில் 934 ரன் (அதிகம் 71, சராசரி 31.13, அரை சதம் 6), 38 ஒருநாள் போட்டியில் 736 ரன் (அதிகம் 95, சராசரி 23.74, அரை சதம் 4) மற்றும் 2 டி20 போட்டியில் 36 ரன் எடுத்துள்ளார்.

மேலும், விக்கெட் கீப்பராக மொத்தம் 93 கேட்ச், 19 ஸ்டம்பிங் செய்து பங்களித்துள்ளார். இது தவிர 194 முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்காகவும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2018ல் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் கடைசியாக களமிறங்கி இருந்தார். அதன் பிறகு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பார்திவ் நேற்று அறிவித்தார். தனக்கு வழிகாட்டிகளாக இருந்த சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே இருவருக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், இக்கட்டான சமயத்தில் ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Parthiv Patel , Parthiv Patel retires from cricket
× RELATED சச்சின் 10 வருடங்களில் செய்ததை...