×

மதுரவாயல்-வாலாஜா சாலையை பழுது நீக்கும்வரை 2 சுங்கச்சாவடிகளில் 50% கட்டணமே வசூலிக்க வேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரவாயல்-வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் வரை 2 வாரங்களுக்கு அந்த சாலையில் உள்ள 2  சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
 சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்திற்கு வந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சாலையில் உள்ள குண்டு, குழிகள் அனைத்தும் 10 நாட்களில் நிரப்பப்பட்டு பழுது நீக்கம் செய்யப்படும் எனவும் 50 கோடி செலவில் சாலையை மீண்டும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சாலைகளின் தரம் உலக தரத்துக்கு இணையாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரவாயல்-வாலாஜா சாலை சரி செய்யப்படவில்லை.
  சென்னை பெங்களூர் சாலையில் மட்டும் ஆண்டுக்கு 500 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன. மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு கோரும் போது பாதிக்கப்பட்டவர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மாநில நெடுஞ்சாலைகள் துறை ஆகியவற்றையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்.  மதுரவாயல்-வாலாஜா சாலை பழுது நீக்கம் செய்யும் வரை 2 வாரங்களுக்கு அந்த சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். வழக்கு டிச. 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



Tags : road ,High Court ,toll plazas ,National Highways Authority , 50 Toll to be levied at 2 toll plazas till repair of Maduravayal-Walaja road: High Court orders National Highways Authority
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...