×

வேல் யாத்திரையில் பங்கேற்ற பாஜவினர் 135 பேர் மீது வழக்கு: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை தாக்கல்

சென்னை:  சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வராகி வழக்கு தொடர்ந்திருந்தார்.   இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் கொரோனா பரவல் குறையும் வரை தமிழகத்தில் எந்த ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு எதிராக வராகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் காவல்துறை டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில்  ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு  காவல்துறை அனுமதி வழங்காத போதும், நீதிமன்ற உத்தரவை மீறி  வேல் யாத்திரையை பாஜ மாநில  தலைவர் எல்.முருகன் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் அனுமதி பெறாமல் பாஜ வேல் யாத்திரை நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரப்ப காரணமாக இருந்தது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதது, காவல்துறையினரிடம் தவறாக நடந்து கொண்டது, சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தது போன்ற குற்றங்களுக்காக இதுவரை 135 பாஜவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதாக இதுவரை 1,241 பேர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : BJP ,activists ,Vail ,I-Court , DGP files case against 135 BJP workers in Vail
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...