×

நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 65 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர் பாதிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி

திருவாரூர்: நிவர், புரெவி புயலால் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் பாதிப்படைந்துள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்தது. மழையால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டத்தை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் இரவு நாகை மாவட்டத்திற்கு வந்தார். நேற்று காலை வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு வந்த முதல்வருக்கு பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார் மற்றும் பேராலயம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து நாகூர் வந்தார். நாகூர் தர்காவிற்கு வந்த முதல்வரை, தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் வரவேற்றார். புரெவி புயல் காரணமாக நாகூர் தர்கா குளத்தின் கரை சுவர் சரிந்து இருந்ததை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை என்ற இடத்திற்கு வந்த முதல்வர், கீழையூர் மற்றும் கருங்கண்ணி ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கியிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களை பார்வையிட்டார்.

தலைஞாயிறு அருகே பழங்கள்ளிமேடு என்ற இடத்திற்கு சென்ற முதல்வர், அப்பகுதியில் உள்ள முகாமில் தங்கியுள்ள 360 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்து ஓரடியம்புலம் கிராமத்திற்கு சென்ற முதல்வர், ஓ.எஸ்.மணியனின் மனைவி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி கிராமத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி, வயல் பகுதியில் இறங்கி சேதமான பயிர்களை பார்தது விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி முடிவுற்ற பின், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு வரும் பொங்கல் தினத்தையொட்டி விவசாயிகளிடம் அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.

தமிழகத்தில் கடந்த நிவர் புயலின்போது 6 பேர் இறந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 398 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 381கால்நடைகளும், 31,011 பறவைகளும் இறந்துள்ளன. 2,971 மரங்கள் சேதமடைந்துள்ளன. 3 ஆயிரத்து 40 முகாம் மூலம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 447 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் சுகாதார வசதி செய்யப்பட்டது. 12ஆயிரத்து 187 ஹெக்டரில் நெற்பயிரும், 3 ஆயிரத்து 473 ஹெக்டரில் தோட்ட பயிரும் பாதிக்கப்பட்டன. புரெவி புயல் காரணமாக 7 பேர் இறந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். 5ஆயிரத்து 509 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 920 மரங்கள் சேதமடைந்துள்ளன. 739 மின்கம்பங்கள் பாதிப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 7 ஆயிரத்து 461 பேர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நெற்பயிர் 53 ஆயிரத்து 63 ஹெக்டரிலும், இதர பயிர்கள் 13 ஆயிரத்து 250 ஹெக்டரிலும், வாழை 561 ஹெக்டரிலும் தமிழகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

8 வழிச்சாலை அமைக்கப்படுமா?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், முதலமைச்சர் என்பதை விட விவசாயி என்பது தான் நிரந்தரம். எனவே தான் விவசாயிகளின் நலன் கருதி தற்போது பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டுள்ளேன். விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டங்களை ஆதரிப்போம் என்பதுடன், எதிரான எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும். அந்த வகையில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருப்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ஆதரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்கு சாலை விரிவாக்கம் என்பது தேவையான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் சேலம் 8 வழி சாலை திட்டம் மத்திய அரசின் திட்டமாக கொண்டு வரப்பட்டது. இதனால் விபத்துக்கள் தடுக்கப்படுவதுடன் எரிபொருள் மற்றும் நேரம் சேமிப்பு கிடைக்கிறது. எனவே நிலம் கையகப்படுத்துதல் என்பது அவசியமான ஒன்று என்றார்.

Tags : Edappadi ,Tamil Nadu ,Nivar ,storms , Paddy crop affected in 65,000 hectares in Tamil Nadu due to Nivar and Purevi storms: CM
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...