×

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் சாரல் மழை; மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைகள் பாசனத்திற்காக திறப்பு

நெல்லை: புரெவி புயல் வளிமண்டல சுழற்சியாக மன்னார்வளைகுடா பகுதியில் நிலை கொண்டு இருப்பதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாசனத்திற்காக மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைகள் இன்று திறக்கப்பட்டன. புரெவி புயல் காற்றழுத்த பகுதியாக நிலை கொண்டு இருப்பதால் தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கான அறிகுறிகள் நிலவுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படுவதுடன், அவ்வப்போது மழையும் பெய்துவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி கனமழையும் பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 23 மிமீ மழையும், சேர்வலாறில் 7 மிமீ, மணிமுத்தாறில் 10.6 மிமீ, அம்பாசமுத்திரம் 15 மிமீ, சேரன்மகாதேவி 1, நாங்குநேரி 3.5, பாளை 2.4, நெல்லை 2 மிமீ மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாபநாசம் அணையின்  நீர்மட்டம் இன்று காலை 129.45 அடியில் இருந்து 134.10 உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு ஆயிரத்து 4298.96 கனஅடிநீர் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. சேர்வலாறு அணை நீர் இருப்பு 146.09 அடியாக உயர்ந்தது. நேற்று சதம் அடித்த மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு இன்று காலை 102.35 அடியாக உயர்ந்தது. இந்த அணைக்கு 1992 கனஅடி நீர் வருகிறது. மணிமுத்தாறு அணை 100 அடியை கடந்ததால் பிசான பருவ நெல் சாகுபடிக்கு மணிமுத்தாறு அணை இன்று திறக்கப்பட்டது. மணிமுத்தாறு மற்றும்  கொடுமுடியாறு அணைகளில் இருந்து வேளாண் பணிகளுக்காக அமைச்சர் ராஜலெட்சுமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு மற்றும் எம்.பி. எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மணிமுத்தாறு அணையின் கீழ் 1, 2, 3, 4 என 4 ரீச்கள் அமைந்துள்ளன. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டினால் இந்த கால்வாய்களில் தண்ணீர் திறக்க முடியும்.

அதன்படி இந்த 1, 2 ரீச்களுக்கு ஒரு ஆண்டும். அடுத்த ஆண்டு 3, 4 ரீச்கள் என சுழற்சி முறையில் இந்த ரீச்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாண்டு 3,4 ரீச்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 24 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 35 அடியாகவும் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சில தெருக்களில் மழைநீர் புகுந்துள்ளது. உப்பாற்று கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8மணி நிலவரப்படி பெய்த மழை விவரம்: விளாத்திகுளம்- 8மிமீ, கோவில்பட்டி-5.5,  எட்டயபுரம்-5, சாத்தான்குளம்-32.8, ஸ்ரீவைகுண்டம்-5.5, காயல்பட்டினம் 65, திருச்செந்தூர்-43, குலசேகரப்பட்டினம் 19மிமீ மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி 184.80 மிமீ மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் நேற்று தென்காசியில் அதிக மழை காணப்பட்டது. தென்காசி மாவட்ட மழை அளவு விபரம்: ஆய்க்குடி 10.60 மிமீ, சங்கரன்கோவில்-5, செங்கோட்டை-14, சிவகிரி-15, தென்காசி-23.40, கடனாநதி-5, ராமநதி-8, குண்டாறு 14 மிமீ மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகளும் ஏற்கனவே நிரம்பியுள்ளன. அடவிநயினார் அணை மட்டும் தற்போது 96 அடியில் உள்ளது.

Tags : Showers ,Nellai ,Thoothukudi ,Tenkasi , Showers in Nellai, Thoothukudi and Tenkasi; Manimuttaru and Kodumudiyaru dams opened for irrigation
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!