×

சுவீடனின் சாம்பியன் நம்ம ஊரு பொண்ணு!

ஜூனியர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருக்கிறார்

நம்முடைய கன்னியாகுமரி பெண் ஒருவர்தான் சுவீடன் நாட்டின் பேட்மின்டன் தேசிய சாம்பியன் என்று சொன்னால் ஆச்சரியமாகதான் இருக்கும். அவர் அஸ்வதி வினோத். பதினேழு வயதுதான் ஆகிறது. பெங்களூர் நேஷனல் ஸ்கூலில்தான் பள்ளிப்படிப்பை தொடங்கினார். அப்பா, பணி நிமித்தமாக சுவீடனுக்கு சென்றதால் குடும்பமும் கூடவே வந்தது. கடந்த பிப்ரவரியில் நடந்த ஸ்வீடிஷ் நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். சுவீடன் பாட்மின்டன் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சாம்பியன் ஆனவர் இவர்தான்.

முன்பாக 2012-13ம் ஆண்டுக்கான சுவீடன் பாட்மின்டனில் ‘பிளேயர் ஆஃப் தி இயர்’ என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் நம்ம அஸ்வதி. இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் பெங்களூர் பிரகாஷ் படுகோனே அகாடமியில் பாட்மின்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனேவிடம் நேரடியாகவே பயிற்சி பெறுகிறார். சமீபத்தில் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஜூனியர் ஒலிம்பிக் போட்டியில் சர்வதேச முன்னணி வீராங்கனைகளுக்கு கடும் போட்டியை கொடுத்தார். “2020ல் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதுதான் என்னுடைய கனவு.

ஜூனியர் ஒலிம்பிக், வேர்ல்டு ஜூனியர் விமன்ஸ் சாம்பியன்ஷிப் மற்றும் ஐரோப்பிய ஜூனியர் விமன்ஸ் சாம்பியன்ஷிப் போன்ற பெரிய டோர்னமென்ட்டுகளில் சுவீடன் சார்பாக பங்கேற்ற அனுபவம் என்னுடைய கனவை நனவாக்கக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ஜெண்டினாவில் நடந்த ஜூனியர் ஒலிம்பிக்ஸில் mixed team relay பிரிவில் தங்கம் வென்றது பெரிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கு. சுவீடன் சார்பாக பங்கேற்றாலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையை நம் நாட்டுக்கு ஏற்படுத்தி கொடுப்பேன்” என்கிற உறுதியோடு பேச ஆரம்பித்தார்.

“உங்க பின்னணி?”

“எங்க குடும்பம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சார்ந்தவங்க. அப்பா வினோத், கணினித் துறையில் பணிபுரிகிறார். அவர் பெங்களூரில் பணியாற்றியபோது நான் அங்கேதான் நான்காவது வரை படிச்சேன். எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் இங்கே வந்தப்போ, நாங்களும் சேர்ந்து வந்துட்டோம். அம்மாவுக்கு இங்கே சுவீடன் கவர்மென்டிலேயே வேலை கிடைச்சிடுச்சி. ஒரு தம்பி. அவனும் என்னை மாதிரி பாட்மிண்டன் விளையாட்டில் டெவலப் ஆயிட்டிருக்கான்”

“உங்களுக்கு எப்படி பாட்மிண்டனில் ஆர்வம்?”

“அப்பாவுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். நண்பர்களோடு பாட்மிண்டன் விளையாட போகும்போது, நானும் கூடவே போவேன். பெங்களூரில் இருந்தப்போ ஓய்வு நேரம் முழுவதையும் பாட்மிண்டன் கோர்ட்டுகளில்தான் செலவழிப்பார். குழந்தையா இருந்தப்போ அவரோட நானும் விளையாடுவேன். எனக்கு நல்லா விளையாட வருதுன்னு கவனிச்சவர், அந்தத் துறையிலே நான் சாதிக்க முடியும்னு நம்பி பயிற்சிகள் கொடுக்க ஆரம்பித்தார். சுவீடன் வந்தபிறகு அந்த ஆர்வம் அதிகமாச்சி. இங்கே நம்ம நாட்டைவிட நிறைய கட்டமைப்பு வசதிகள் இருக்கு. பள்ளிகளிலேயே விளையாட்டை ஊக்குவிக்கிறாங்க.”

“நீங்க இப்போ சுவீடனோட சாம்பியன் இல்லையா?”

“இதெல்லாம் கனவு மாதிரி இருக்குங்க. என்னோட வயசுலே யாருமே இங்கே பாட்மின்டன் நேஷனல் சாம்பியனா ஆனதில்லைன்னு சொல்லுறாங்க. சுவீடனோட தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாட அனுப்புறாங்க. என்னோட எய்ம் 2020 ஒலிம்பிக்தான். அதுலே சாதிப்பேன்னு நம்பிக்கை இருக்கு. பெற்றோர் காட்டுற ஊக்கமும், இந்த நாட்டுலே எனக்கு கிடைச்சிருக்கிற ஆதரவும் அந்த நம்பிக்கையை சாத்தியப்படுத்தும்.”

“இந்தியாவிலும் பயிற்சி எடுத்துக்கறீங்க...”

“ஆமாம். உலகின் சிறந்த பாட்மின்டன் பயிற்சியாளர்கள் இந்தியாவில் இருக்காங்க. வருஷத்துக்கு ஒருமுறை ஒரு மாசம் பெங்களூரில் இருப்பேன். அங்கே பிரகாஷ் படுகோனே பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக்கறேன். பிரகாஷ் படுகோனே மட்டுமில்லாம விமல்குமார், யூசுப் ஜோஹாரி ஆகியோர் ஆட்ட நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கிறாங்க. பொதுவா வாரத்துக்கு 15 மணி நேரம் கடுமையான பயிற்சி எடுத்துக்கிறது என் வழக்கம். இந்தியன் பேட்மின்டன் லீக்கில் விளையாடணும்னு ஆசையா இருக்கு. என்னதான் உலகம் முழுக்க போய் விளையாடினாலும், இந்தியாவில் விளையாடுற மாதிரி வருமா?”

“கிரிக்கெட், கால்பந்தாட்டம் தவிர்த்து மற்ற விளையாட்டுகளுக்கு பெருசா ஆதரவு கிடைக்கிறதில்லைன்னு சமீபத்தில் சொல்லியிருந்தீங்க...”

“ஆமாம். அந்த விளையாட்டுகளில் பங்கேற்றாலே நட்சத்திரம் ஆயிடறாங்க. ஆனா, பாட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் நாங்க சாம்பியன் பட்டம் வென்றால் கூட அவங்க அளவுக்கு பிரபலம் அடையறதில்லை. இதுவும் கடுமையான உழைப்பை கோருகிற விளையாட்டுதான். ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய விளையாட்டுதான். சமீபமா இந்தியாவில் சாய்னா நெக்வால், ஜ்வாலா கட்டா, பி.வி.சிந்து போன்ற வீராங்கனைகள் பாட்மின்டனில் கடுமையா போராடி நட்சத்திரங்களா உயர்ந்திருக்காங்க. சுவீடனில் அவங்களை மாதிரி நானும் நட்சத்திரமா பிரகாசிப்பேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துக்க தகுதி பெற்றுட்டேன்னா என்னோட பேரையும் எல்லாரும் தெரிஞ்சுப்பாங்க.”

“இளம் விளையாட்டு வீரர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?”


“நானும் இளம் விளையாட்டு வீராங்கனைதானே? அட்வைஸ் சொல்லுற அளவுக்கு வயசாயிடிச்சா என்ன? கடுமையா உழைச்சா வெற்றி என்கிற என் அனுபவத்தை மட்டும் எல்லாருக்கும் சொல்லுறேன். விளையாட்டில் என்ன ஆர்வம் காட்டுறோமோ, அதே ஆர்வத்தை படிப்பிலும் காட்டணும் என்பது மட்டுமே என் அட்வைஸ்.”

- சுவீடனிலிருந்து ரவீந்திரன் ஆண்டனிசாமி

Tags : Sweden ,daughter-in-law ,
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்