தொடரை இழந்திருந்தாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார். அண்மையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற டி20 தொடரில்  2-1 என இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் தமிழக வீரர் ‘யார்க்கர் கிங்’ நடராஜன் சிறப்பாக ஆடினார். ஆகையால் டி20 தொடரை வென்றதற்காக இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பையை, நடராஜனிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கேப்டன் கோஹ்லி. அதே போல தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் தனக்கு  வழங்கப்பட்ட கோப்பையை நடராஜனிடம் கொடுத்து இதற்கு முழு தகுதி வாய்ந்தவர் நீங்கள் தான் என்று பாராட்டினார்.

இந்த நிலையில் சக வீரர்கள் மட்டுமின்றி, தமிழக வீரர் நடராஜனை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும்  தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகழ்ந்து பேசி உள்ளார். அதில், தோல்வியோ, வெற்றியோ நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும், களத்தைத் தாண்டியும் மதிக்கிறோம். நாங்கள் தொடரை இழந்து விட்டாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு இனிமையானவர். ஆட்டத்தை மிகவும் நேசிப்பவர்.வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அணிக்கு வந்து, முதன் முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது என்ன ஒரு சாதனை நண்பா. வாழ்த்துகள்!, என்று வார்னர் வாழ்த்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடராஜன் இடம்பெற்றிருந்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>