சென்னை ஆலந்தூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் திகைப்பு..!!

சென்னை: சென்னை ஆலந்தூரில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை கிண்டி அடுத்த ஆலந்தூர் ராம்நகரில் இருந்து வானுவம்பேட்டையை இணைக்கும் பிரதான சாலையில் பரத் மருத்துவமனை அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் 10 அடி அகலத்துக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் மையப்பகுதியில் இப்பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக ஆலந்தூர் நகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் சாலையில் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிரதான சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சாலையின் இருபகுதிகளிலும் மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கழிவுநீர் குழாய் உடைந்து அதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வு செய்த பிறகே பள்ளம் எவ்வகையில் ஏற்பட்டது என்பது குறித்து தகவல் தெரிவிக்க முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>