×

பராமரிப்பு இன்மையால் புதர் மண்டிகிடக்கும் அவலம்: தண்ணீரை சேமிக்க வழியில்லாத திருவதிகை அணைக்கட்டு

ஆங்கிலேயர் காலத்தில் பண்ருட்டி அடுத்த திருவதிகையில் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் தண்ணீரை சேமிக்கும் நோக்கில் திருவதிகை- சாத்திப்பட்டு இடையே அணைக்கட்டு கட்டப்பட்டது.  இதனை பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தற்போது  பராமரித்து வருகிறது. இதன்மூலமாக பண்ருட்டியை சுற்றியுள்ள 6469 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இருபத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயம், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வந்தது.  காலப்போக்கில் உரிய பராமரிப்பு இன்மையால் மிகவும் பழமையான இந்த அணைக்கட்டு விவசாயத்துக்கு பயன்படாமல் போய்விட்டது. அணைக்கட்டையொட்டி  முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. நீர் பிடிப்பு பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றக்கோரி விவசாயிகள் பலமுறை வலியுறுத்தியும் பொதுப்பணித்துறை உரிய  நடவடிக்கை எடுக்கவில்லை.

இரு கரைகளும் பலப்படுத்தி தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இன்னமும்  பெயரளவுக்கு மட்டுமே அணைக்கட்டிலிருந்து செல்லும் வாய்க்கால்கள் நிலைமை இருக்கிறது. சரிவர தூர்வாராததாலும், ஆக்கிரமிப்புகளாலும் வாய்க்கால்கள் மெல்ல காணாமல் போய் வருகிறது. மழை காலங்களில் வெள்ள நீரை நிரந்தரமாக சேமித்து வைக்க அணைக்கட்டின்  உயரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  இதன்காரணமாக ஆற்றில் தண்ணீர் செல்லும் போது, சேமிக்க வழியின்றி வீணாக கடலில் கலக்கிறது.

அணைக்கட்டிலிருந்து துவங்கும் வாய்க்கால்களுக்கு முறையாக கான்கிரீட்டுகளால் ஆன கரைகள் இல்லாததால், ஆங்காங்கே உடைத்துக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர  கெடிலம், பெண்ணை ஆறுகளில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டிவரும் தமிழக அரசு ஏற்கனவே உள்ள அணைக்கட்டுகளை சீர்படுத்தி உயரத்தை அதிகப்படுத்த எவ்வித  பூர்வாங்க நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இருப்பினும் ஆண்டுதோறும் இதனை பராமரிக்க செலவு செய்வதாக கணக்கு  காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அணைக்கட்டினை சீரமைப்பதன் மூலமாக  திருவதிகை, சாத்திப்பட்டு, எழுமேடு, நரிமேடு பெலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயம் மேம்பாடு அடையும்.

இது குறித்து சாத்திப்பட்டை சேர்ந்த விவசாயி பாலமுருகன் கூறுகையில்,  எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்,  அணைக்கட்டில் தண்ணீர் தேங்கி விவசாய பயன்பாட்டுக்கு உதவியதாக தெரியவில்லை. பொதுப்பணித்துறையின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம். அணைக்கட்டை சுற்றியுள்ள கிராமங்களில் முந்திரி, கொய்யா, நெல், கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. அணைக்கட்டில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே நீர் ஆதாரம் பெருகும். மழை காலத்தில் வரும் தண்ணீரை கூடுதலாக சேர்த்து வைக்கும் திட்டமும் அரசிடம் இல்லை. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் கண்டு கொள்வதில்லை.

விவசாய பிரிவு மாவட்ட தலைவர் குப்புசாமி கூறுகையில், ஏரி, வாய்க்கால், குளம் ஆகியவற்றை தமிழக அரசு பெயரளவில் மட்டுமே தூர்வாரி இருக்கிறது. அணைக்கட்டும் இருந்தும் காட்சிப்பொருளாக மட்டுமே விளங்குகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தன போக்கினால் மழை நீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை.  இதேநிலை நீடித்தால் இந்த அணைக்கட்டு யாருக்கும் பயனின்றி மண்ணில் புதைந்துவிடும். தற்போது கூட நிவர்புயலால் ஏற்பட்ட மழையால் வந்த மழை நீரை சேமிப்பதற்கு முடியாமல் வீணாக கடலுக்கு சென்றது. பெயரளவுக்கு மட்டுமே பெண் ஊழியர் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் எடுத்து அணைக்கட்டை நேரில் ஆய்வு செய்து தண்ணீரை சேமிக்க வழிவகைகளை ஆராய வேண்டும் என்றார்.

Tags : dam ,Travancore , Dam
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்