×

தூத்துக்குடி மாவட்டத்தை புரட்டிப் போட்ட புரெவி புயல்: காப்பீடு செய்ய தவம் கிடக்கும் விவசாயிகள்

எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையால் பயிர்களில் நோய் தாக்கம் மற்றும் விளை நிலங்களில் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் மானாவாரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அவர்களுக்கு ஒரே ஆறுதலான பயிர்காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும், அதற்காக அடங்கல் வழங்க விஏஓக்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புரெவி புயல் தாக்கத்தால் ஏற்பட்ட தொடர் மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட தாலுகாக்களில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்கள் மஞ்சள் நோயாலும், மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் புழு தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விளை நிலங்களில் மழைநீரும் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன.

விதை, உரம், மருந்து, கூலி என மண்ணை நம்பி கையில் இருந்த பணத்தை செலவு செய்த நிலையில் விவசாயிகள் தற்போது போட்ட பணத்தை மீட்பதற்கு பயிர் காப்பீடு செய்வது தான் ஒரே வழி என்ற நிலையில் இணைய சேவை மையங்களில் காத்துக் கிடக்கின்றனர், தொடர் அரசு விடுமுறை, மின்தடை, இணைய சேவை நிறுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் பயிர்காப்பீடு பதிவு செய்ய காலதாமதமாகிறது. விவசாயிகள் விளை நிலங்களில் பயிரிட்ட பயிர்களின் நிலையை பார்வையிடக்கூட நேரமில்லாமல் விஏஓவிடம் அடங்கல் வாங்கவும், வாங்கிய அடங்கலை பதிவு செய்யவும் நாள் கணக்காக அலைகிறார்கள்.

விஏஓக்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று பணி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும், பெரும்பாலான விஏஓக்கள் அதனை கடைப்பிடிப்பதில்லை. ஆனாலும் பயிர் காப்பீடு உள்ளிட்ட முக்கிய காலங்களில் சில விஏஓக்கள் மனிதாபிமான அடிப்படையில் தங்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று அடங்கல் வழங்குகின்றனர். ஆனால் பெரும்பாலான விஏஓக்கள் பெயரளவிற்கு ஓரிரு நாள் சென்று விட்டு மாதம் முழுவதும் நகரில் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.

ஒரு விஏஓ கிராமத்திற்கு சென்றால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அலைய வேண்டியதில்லை அதனை விடுத்து அவர் ஒருவருக்காக விவசாயிகள் வயதான காலத்தில் மழையில் அலையும் அவலநிலை ஆண்டுதோறும் தொடர்கிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பயிர் காப்பீடு செய்யவதற்கு காப்பீடு நிறுவனம் வெள்ளைச்சோளம், மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு டிசம்பர் 21ம் தேதியும், கம்பு, எள், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கு டிச.18ம் தேதியும், உளுந்து பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு டிச.16ம் தேதியும் கடைசி நாள் என அறிவித்துள்ளது. ஆனால் சேவை மையங்களில் ஒரு விவசாயிக்கு பதிவு செய்ய குறைந்தது அரைமணி நேரம் ஆகிறது. இதில் மின்தடை, இணையம் பழுது உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட தேதிகளுக்குள் பயிர்காப்பீடு செய்ய தாமதமாகிறது. எனவே உளுந்து, பாசி, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

அடங்கலுக்கு கட்டாய வசூல்

சித்திரை மாதம் துவங்கி நிலத்தை பண்படுத்தி உழுது, செடிவெட்டி, மறு உழவிட்டு, மழைபெய்ததும் விதை விதைத்து, பின் உரமிட்டு, பயிரை நோயிலிருந்து காப்பாற்ற மருந்து தெளித்து, பயிர்கள் நன்றாக வளர களை எடுத்து என விவசாயிகள் நிலத்தில் விதை போட்ட நாள் முதல் மாடாய் உழைக்கின்றனர். பயிர் நன்றாக மணிப்பிடித்து வளர்ந்து அதன் பின்னர் அறுவடை செய்து சரியான நேரத்தில் விலை உள்ள போதே விற்று வந்த பணத்தில் விவசாய பொருட்கள் வாங்க வங்கியில் வாங்கிய கடன், தங்க நகையை அடகு வைத்த கடன் இதையெல்லாம் அடைத்தது போக மீதமுள்ள பணத்தை எண்ணும் போது மிஞ்சுவது விரக்தி மட்டும் தான். இதுஇன்றுமட்டுமல்ல காலம் காலமாய் விவசாயிகளின் பரிதாபநிலை. ஆனால் விவசாயிகள் அடங்கல் வாங்க சென்றால் எட்டயபுரம் தாலுகாவில் ரூ.100 முதல் 500 வரை தகுதியை பொறுத்து கட்டாய வசூல் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு செல்லாத விஏஓ, பணம் வசூலிப்பு குறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், வரும் காலங்களிலாவது இந்நிலை தொடரக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிச்சயம் நடவடிக்கை

எட்டயபுரம் தாசில்தார் அய்யப்பன் கூறுகையில், ‘எட்டயபுரம் தாலுகாவில் கிராமங்களுக்கு செல்லாத விஏஓக்கள் மற்றும் விவசாயிகளிடம் அடங்கல் வழங்குவதற்கு கட்டாய பணம் வசூலிக்கும் விஏஓக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அதே போல் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி அடங்கல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்| என்றார்.

இரட்டிப்பு செலவு

புரட்டாசி பட்டத்தில் மழைக்காக காத்திருந்து விதைத்து காலதாமதமாக பெய்த மழையால் விதைகள் சரியாக முளைக்கவில்லை, ஆகையால் விவசாயிகள் மறு விதைப்பு விதைத்தனர். இதனால் இரட்டிப்பு செலவு ஏற்பட்டது. மக்காச்சோளம், பாசி, உளுந்து பருவம் தவறி மழை பெய்தாலும் ஓரளவு நன்றாக இருந்தது. இந்நிலையில் பயிர்களை தாக்கிய நோயிலிருந்து மருந்து தெளித்து பயிரை காப்பாற்றும் முன் புரெவி புயலால் பெய்த தொடர்மழையால் பயிர்கள் சேதமடைந்தததால் நடப்பு வருடம் விவசாயிகளுக்கு லாபம் என்பது இல்லாவிட்டாலும் போட்ட முதல் கைக்கு கிடைக்குமா? அல்லது ‘காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான் மிச்சம்’ என்ற பாடலுக்கு ஏற்றது போல் ஆகி விடுமா என பெருமூச்சோடு காத்திருக்கும் விவசாயிகளுக்கு அரசு தான் உதவிசெய்ய வேண்டும்.

Tags : storm ,Thoothukudi district , Ettayapuram
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...