×

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா சந்திப்பு: தம் மீதான புகார் குறித்து விளக்கம்..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தம் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ள சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து சூரப்பா பேசியிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் முறைகேடு  குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. 3 மாதத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேரில் சந்தித்து பேசியுள்ளார். குறிப்பாக தன் மீது தற்போது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை ஆளுநரிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடியதால் இந்த முறைகேடு குற்றச்சாட்டு குறித்து தன் பக்கம் உள்ள நியாயங்களை ஆளுநரிடம் எடுத்துரைத்ததாகவும், விசாரணையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆளுநரிடம் ஆலோசித்ததாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழக ஆளுநர், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் சூரப்பா மீது அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு தெரியாமல் அரசு குழு அமைந்துள்ளது வருத்தமளிக்கிறது எனவும் ஆளுநர் கூறியுள்ளார். இதுவரை அரசு தரப்பிலிருந்து இந்த கடிதத்திற்கு பதில் செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தம் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Banwarilal Purohit ,Anna University ,Surappa ,meeting , Governor Banwarilal Purohit, Anna University. Vice-Chancellor Surappa, meeting
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...