நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்களா ? : பீலா ராஜேஷுக்கு ஐகோர்ட் கண்டனம்!!

சென்னை : நீதிமன்ற உத்தரவை மீறிய பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (கெனைன் கிளப்) முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கெனைன் கிளப்பை நிர்வகிக்க ஏன் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கக் கூடாது என கெனைன் கிளப்புக்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து பதிவுத்துறையின் நோட்டீசை எதிர்த்து கெனைன் கிளப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கெனைன் கிளப் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை பிறப்பித்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி கெனைன் கிளப்பை நிர்வகிக்க 3 சிறப்பு அதிகாரிகளை பதிவுத்துறை நியமித்தது. பதிவுத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கெனைன் கிளப் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, நீதிமன்ற தடை உத்தரவை மீறி தனியார் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மத்திய பத்திரப் பதிவுத்துறை பதிவாளர்ருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்..நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்களா ? என நீதிபதிகள் கடுமையாக சாடினார். இறுதியாக, கெனைன் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளின் உத்தரவு நிறுத்திவைக்கப்படும் என்று உறுதியளித்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories:

>