மாநகராட்சி அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்: சென்னை கோடம்பாக்கம் சாலையில் மழைநீரால் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி..!

சென்னை: சென்னை கோடம்பாக்கம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநகராட்சி அலட்சியத்தால் இருசக்கர வாகனத்தில் சென்ற நரசிம்மன் என்பவர் நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னையில் கடந்த சில வாரங்களாக நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் நீர்தேங்கி சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வந்தது. இதனையடுத்து, சேதமடைந்த சாலைகளை சரி செய்வதற்காக மாநகர்க்த்தி தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதி அருகே உள்ள மேம்பால சாலையில் பணிக்கு செல்வதற்காக நரசிம்மன் என்பவர் அந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் நீர்தேங்கி இடர்பாடு தெரியாத வண்ணம் இருந்தது.  இருசக்கர வாகனத்தில் சென்ற நரசிம்மன், பள்ளத்தில் விழுந்து தடுமாறி நிலைத் தவறி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

இதன் காரணமாக, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான இந்த கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதியை கடக்கின்றனர். தற்போது, இந்த உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியை மூடுவதற்கான பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், காவல்துறையினரும் விபத்து சம்பவம் ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பாக சென்னை மதுரவாயலில் தாய், மகள் இருவரும் மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நிகழ்வு தணிவதற்குள் தற்போது கோடம்பாக்கம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் என்பவர் உயிரிழந்தது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>