3வது டி20 போட்டியில் ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி: 2-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா: கேப்டன் கோஹ்லி போராட்டம் வீண்

சிட்னி: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முன்னதாக நடந்த ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என வென்ற நிலையில், முதல் 2 டி20 போட்டிகளிலும் அபாரமாக  வென்ற இந்திய அணி அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. இந்நிலையில், கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார். அணியில் மாற்றம்  ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிசுக்கு பதிலாக கேப்டன் பிஞ்ச் இடம் பெற்றார். மேத்யூ வேடு, பிஞ்ச் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். பிஞ்ச் ரன் ஏதும் எடுக்காமல் சுந்தர் சுழலில் ஹர்திக் வசம் பிடிபட்டார்.  வேடு - ஸ்மித் இணை 2வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது. ஸ்மித் 24 ரன் எடுத்து சுந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

அடுத்து வேடு - மேக்ஸ்வெல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 90 ரன் சேர்த்தது. வேடு 80 ரன் (53 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 54 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 3  சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். ஷார்ட் 7 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. ஹென்ரிக்ஸ் 5, சாம்ஸ் 4 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சுந்தர் 2, நடராஜன், தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ராகுல், தவான் இருவரும் துரத்தலை  தொடங்கினர். மேக்ஸ்வெல் சுழலில் ராகுல் டக் அவுட்டாகி வெளியேற இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. எனினும், தவான் - கோஹ்லி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். தவான் 28 ரன்  எடுத்து ஸ்வெப்சன் பந்துவீச்சில் சாம்ஸ் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் கோஹ்லி உறுதியுடன் போராட... சாம்சன் 10 ரன்னும், ஷ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஸ்வெப்சன் சுழலில் மூழ்கினர்.

கோஹ்லி - ஹர்திக் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர். ஹர்திக் 20 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), கோஹ்லி 85 ரன் (61 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை  கொடுத்தது. சுந்தர் 7 ரன்னில் வெளியேறினார். இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஷர்துல் 17 ரன் (7 பந்து, 2 சிக்சர்), சாஹர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி.  தரப்பில் ஸ்வெப்சன் 3, மேக்ஸ்வெல், அபாட், டை, ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டது. ஸ்வெப்சன் ஆட்ட நாயகன் விருதும், ஹர்திக் பாண்டியா தொடர்  நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகல்/இரவு போட்டியாக டிச. 17ம் தேதி தொடங்குகிறது.

நடராஜனுக்கு கவுரவம்!

டி20 தொடரை வென்றதற்காக இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பையை, ‘யார்க்கர் கிங்’ நடராஜனிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கேப்டன் கோஹ்லி. அதே போல தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் தனக்கு  வழங்கப்பட்ட கோப்பையை நடராஜனிடம் கொடுத்து இதற்கு முழு தகுதி வாய்ந்தவர் நீங்கள் தான் என்று பாராட்டினார். சக வீரர்களின் இந்த பெருந்தன்மையும் பாராட்டும் நடராஜனை வெகுவாக நெகிழ வைத்தது.

ரசிகர்களால் உற்சாகம்!

டி20 கிரிக்கெட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஹர்திக் அதிரடியை ஆரம்பித்தபோது வெற்றி பெறுவோம் என நம்பினேன். நாங்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பின்னடைவை  கொடுத்துவிட்டது. நடு கட்ட ஓவர்களில் கணிசமாக ரன் எடுக்காதது வெற்றி வாய்ப்பை பாதித்தது. நடுவில் 25-30 ரன் பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தால், ஹர்திக் உள்ளே வரும்போது 60 ரன் தான் தேவைப்பட்டிருக்கும். டி20 தொடரை வென்றது  மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் உற்சாகத்துக்கு ரசிகர்களே முக்கிய காரணம். கடினமான தருணங்களில் அவர்களின் ஆரவார ஆதரவு உத்வேகத்தை கொடுக்கிறது.- கேப்டன் விராத் கோஹ்லி

Related Stories:

>