×

அரை சதம் அடித்தார் சாஹா பயிற்சி ஆட்டம் டிரா

சிட்னி: இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. டிரம்மாய்ன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி  9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்  எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேப்டன் ரகானே ஆட்டமிழக்காமல் 117 ரன் விளாசினார். ஆஸி. ஏ பந்துவீச்சில் பேட்டின்சன் 3, நெசர், ஹெட் தலா 2, பேர்டு, ஸ்டெகடீ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய  ஆஸ்திரேலியா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்திருந்தது. கேமரான் கிரீன் 114 ரன், ஸ்டெகடீ 1 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டெகடீ 10 ரன் எடுத்து சிராஜ் பந்துவீச்சில்  சாஹா வசம் பிடிபட்டார். ஆஸி. ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 306 ரன் என்ற ஸ்கோருட (95 ஓவர்) முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. கிரீன் 125 ரன்னுடன் (202 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல்  இருந்தார்.

இந்தியா ஏ பந்துவீச்சில் உமேஷ், சிராஜ் தலா 3, ஆர்.அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 59 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 61 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து  டிக்ளேர் செய்தது. ஷா 19, கில் 29, விஹாரி, ரகானே தலா 28, உமேஷ் 11 ரன் எடுத்தனர். சாஹா 54 ரன் (100 பந்து, 7 பவுண்டரி), கார்த்திக் தியாகி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. ஏ பந்துவீச்சில் ஸ்டெகடீ 5, கிரீன், நெசர்  தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 131 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. ஏ அணி 15 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது.


Tags : Saha ,training match draw , Saha training match draw scored half century
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு வீண் மும்பையை வீழ்த்தியது குஜராத்