மராட்டியத்தில் வீரசிவாஜி போல தமிழகத்தில் மன்னர்களை கொண்டாடுவதில்லை: ராராஜராஜசோழனுக்கு கோயில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: ராஜராஜசோழனின் நினைவிடத்தில் கோயில் கட்ட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  கோவையைச் சேர்ந்த தியாகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:   மாமன்னர் ராஜராஜ சோழனின் உடல் தஞ்சை மாவட்டம், பூதலூர் கிராமத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடம்  தற்போது வெட்டவெளியாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, ஆசிய நாடுகள் வரை படையெடுத்து  வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் ராஜராஜசோழன்.  சைவ சமய நெறிகளை பரப்பிய பெருமையைச் கொண்ட தமிழ் மன்னரின் நினைவிடம் எந்தவித பராமரிப்புமின்றி ஓலைக்குடிசைக்கு அடியில் வெட்ட வெளியில் உள்ளது.

அந்த இடத்தில் ராஜராஜசோழனுக்கு சிலை மற்றும் கோயில் அமைக்கவும், ராஜராஜ சோழனின் வரலாற்று பெருமைகளை நினைவு கூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கவும், ராஜராஜசோழன் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள  சிவலிங்கத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவும், இந்தப் பகுதியில் கோயில் அமைக்கவும் அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். கோயில் அமைத்த பிறகு அங்கு எந்தவித உரிமையும் கோர மாட்டோம், இந்து சமய அறநிலையத்துறையின்  சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கோயில் திருப்பணி வேலைகளை முடித்து தருகிறோம். எனவே, இதற்கு அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர்,  வீர சிவாஜியை மராட்டியத்தில் கொண்டாடுவதைப் போல, தமிழகத்தில் நம் மன்னர்களை நாம் கொண்டாடுவதில்லை. ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை  பெரிய கோயிலை உருவாக்கிய மாமன்னர் ராஜராஜசோழன் போன்ற பலர்  கடல் கடந்து பல நாடுகளை வெற்றி கொண்டு சாதனை படைத்தனர்.  இதையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே மனுதாரர் கோரிக்கை குறித்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலர்,  அறநிலையத்துறை கமிஷனர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: