×

8 மாதத்திற்கு பிறகு மனமாற்றம்: தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.!!!

சென்னை: தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பட்டப்படிப்பு  படித்தவர்கள் நிச்சயம் 10 மற்றும் 12ம் வகுப்புகளிலும், 10ம் வகுப்புப் படித்தவர்கள் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே-அரசுப்  பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு-சட்டப்பேரவையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், சட்டம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை வரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கிடையே,  குரூப்-1 தேர்வுகளில் தமிழ்வழி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், 20% சட்டத் திருத்தத்திற்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து,  நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் பயின்ற  மாணவர்களுக்குப் பயனளிக்கும் இவ்வளவு மாதங்களாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்?

 தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலை  கிடைக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி-அதற்காகத் திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திடும் சூழ்நிலையை உருவாக்கிட  வேண்டாம் என அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20%  இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.


Tags : Governor ,Tamil , Conversion after 8 months: DNPSC for Tamil students Governor approves bill to provide 20% reservation in exams !!!
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...