×

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உயரம் 8,848.86 மீ : ஒரு வருடம் அளவீட்டிற்கு பின் நேபாளம் அறிவிப்பு!!

காத்மண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உயரம் என்ன எனக் கேட்டால் நாம் அனைவரும் 8,848 மீட்டர் என உடனே சொல்லி விடுவோம். ஆனால் நேபாளம் மற்றும் சீன அரசுகளுக்கு இதில் உடன்பாடில்லை.நேபாளத்தை உலுக்கிய 2015 பூகம்பத்திற்குப் பிறகு 8,848 மீட்டர் உயரம் உண்மையான நீளமாக இருக்காது என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊகங்களுக்குப் பிறகு உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளவிட நேபாளம் முயன்றது.

மலையின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாள அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நியமிக்கும் அதே வேளையில், சீனாவும் திபெத்திய பக்கத்திலிருந்து உயரத்தை அளவிடும் பணியைத் தொடங்கியது. பின்னர், 2019’ல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின் போது, ​​இரு நாடுகளும் இணைந்து உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதையடுத்து எவரெஸ்டின் உயரம் குறித்து ஒரு வருடமாக அளவீடு நடத்திய பின்னர், நேபாளம் இன்று புதிதாக அளவிடப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவித்துள்ளது. அதன்படி,  எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் உயரம் அதிகரித்து 8,848.86 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்த 1954-ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Everest ,world ,Nepal , Everest, Height, Nepal, Announcement
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...