×

டெல்லி முதல்வர் என்ற முறையில் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்வைத்த குற்றசாட்டை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் எங்கும்  செல்லலாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி, ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் போராடி வரும் விவசாயிகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியது. நேற்று விவசாயிகளை சந்தித்து திரும்பிய பிறகே டெல்லி முதல்வர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, வீட்டில் இருந்து யாரும் வெளியேறவோ, யாரும் வீட்டிற்குள் செல்லவோ அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறியது.

அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க சென்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அகிலேஷ் திரிபாதியை டெல்லி போலீசார் சந்திக்கவிடாமல் தடுத்துத் தாக்கியதாகவும் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி முன்வைத்த குற்றசாட்டினை டெல்லி வடக்குப் பகுதியின் போலீஸ் இணை கமிஷனர் ஆண்டோ அல்போன்ஸ் ஆம் ஆத்மி கூறியுள்ள தகவல் முழுமையாக தவறானது என்றும் டெல்லி முதலமைச்சர் என்ற முறையில் கெஜ்ரிவால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த மாறுபட்ட இந்த விளக்கங்களால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Delhi ,Chief Minister ,anywhere ,Arvind Kejriwal ,Delhi Police ,Aam Aadmi Party , Delhi, Chief Minister Kejriwal, can go anywhere, police
× RELATED திகார் சிறையில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் மனைவி சுனிதா சந்திப்பு