ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தை கண்டங்கள் கவனித்து கொண்டிருக்கின்றன; அதை நீளவிடக்கூடாது: வைரமுத்து ட்விட்

சென்னை: ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டங்களை நீளவிடக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 13ம் நாளை எட்டியுள்ளது. கொட்டும் பனியிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் டெல்லியிலும் அதைச் சுற்றியும் கூடி போராடி வருகிறார்கள். டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது. குளிர் நிலலவுகிறது. இதையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, இந்திய விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் என்னும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஆளுங்கட்சி ஆதரவுடன் முழு அடைப்பு நடப்பதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. அசம்பாவிதங்களை தவிர்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.  ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசும் மனம் திறக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

ரத்தம் உறையும் குளிரிலும்

சித்தம் உறையாத

விவசாயிகளின் போராட்டத்தைக்

கண்டங்கள் கவனித்துக்

கொண்டிருக்கின்றன;

அதை நீளவிடக்கூடாது.

இன்று அடைக்கப்பட்ட நாட்டின்

கதவுகள் திறக்கும் போதே

மத்திய அரசும் மனம் திறக்க வேண்டுமென்று

மக்கள் விரும்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>