ஏபிஎம்சிக்கு சீர்திருத்தங்கள் தேவை என்று நான் கூறியது உண்மை தான்:மத்திய அமைச்சருக்கு சரத் பவார் பதில்.!!!

டெல்லி: ஏபிஎம்சிக்கு சீர்திருத்தங்கள் தேவை என்று நான் கூறியது உண்மை தான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்துக்கு சரத் பவார் பதிலளித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் முகாமிட்டு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு கடந்த 5-ம் தேதி நடத்திய 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளை பொறுத்த வரையில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர்.

இதற்கிடையே, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், புதிய பண்ணை சட்டங்கள் தொடர்பான பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் குதித்துள்ளன. யுபிஏ ஆட்சியின் போது, வேளாண்த்துறையில் சீர்திருத்தங்களுக்காக மோடி அரசு இன்று என்ன செய்கிறதோ அதை அவர்கள் செய்தார்கள்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் புதிய பண்ணை சட்டங்களை எதிர்க்கிறார். ஆனால் அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது, சந்தை உள்கட்டமைப்பில் தனியார் துறை பங்களிப்பு செய்யுமாறு அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்துக்கு பதிலளித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஏபிஎம்சிக்கு சில சீர்திருத்தங்கள் தேவை என்று நான் கூறியிருந்தேன். ஏபிஎம்சி சட்டம் தொடர வேண்டும், ஆனால் சீர்திருத்தங்களுடன். நான் கடிதம் எழுதியிருந்தேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களின் மூன்று சட்டங்களில் ஏபிஎம்சி கூட குறிப்பிடப்படவில்லை. அவர்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.  

நாளை 5 முதல் 6 வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துரையாடி, ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள். நாளை ஜனாதிபதியுடன் மாலை 5 மணிக்கு சந்திப்பு உள்ளது. எங்கள் கூட்டு நிலைப்பாட்டை அவர் முன் முன்வைப்போம் என்றும் சரத் பவார் தெரிவித்தார்.

Related Stories:

>