×

வனத்துறை அனுமதி மறுப்பால் பல ஆண்டுகளாக கிடப்பில் குண்டும் குழியுமான சாலை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே. பல ஆண்டுகளாக வனத்துறை அனுமதிக்காததால், பள்ளம் மேடான சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. சோழவந்தான் பகுதியில் முக்கிய சாலைகளில் ஒன்று மேலக்கால்- விக்கிரமங்கலம் சாலை. வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை எல்லைக்குட்பட்ட இதன் வழியாக மதுரையிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு அரசு பேருந்துகளும், விவசாயப் பனிகளுக்காக பல்வேறு வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.

இச்சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டும் நாகமலை வனப்பகுதியில் வருகிறது. மற்ற இடங்களில் புதிய சாலை போடப்பட்டு பளீச் என இருந்தாலும், இந்த இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டும் வனத்துறை அனுமதி கொடுக்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளதால்,சாலை முற்றிலும் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இச்சாலையில் இரவிலும், மழை காலத்திலும் பள்ளம் மேடு தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும்,போராட்டங்கள் நடத்தியும் பலனில்லாததால் இப்பகுதி மக்கள், மீண்டும் பல்வேறு போராட்டங்கள் நடத்த தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து விக்கிரமங்கலம் விவசாயி பால்பாண்டி கூறுகையில், ‘‘தற்போது சிறு ஊர்களுக்கு கூட நல்ல சாலை வசதி உள்ள நிலையில், ஆயிரக்கான வாகனங்கள் சென்று வரும் இச்சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதிக்க மறுப்பதாக நெடுஞ்சாலை துறையினர் கூறுகின்றனர். எல்லாம் தமிழக அரசுக்குட்பட்ட மக்கள் பணிக்கான துறை தானே?. எத்தனையோ வனப்பகுதியில் சாலைப் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கு மட்டும் இதற்காக பல அறப்போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. அச்சமயம் ஆறுதல் கூறி சமாளித்து அனுப்பும், அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் அடுத்து கண்டு கொள்வதில்லை. இந்த குண்டும்,குழியுமான சாலையால் பல உயிர்பலி ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை, வனத்துறை இணைந்து இச்சாலையை விரைவில் புதிப்பிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்” என்றார்.

Tags : road , Road, Forest Department
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...