சேதுபாவாசத்திரம் அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதியின்றி சடலத்தை வயலில் இறங்கி சுமந்து செல்லும் பொதுமக்கள்

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் வயல்வெளியில் இறங்கி சடலத்தை பொதுமக்கள் தூக்கி செல்கின்றனர். இதனால் சாலை வசதி அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லியடிக்காடு ஆதிதிராவிடர் காலனி மற்றும் அருகில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பின்னவாசல் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி என இரண்டு பகுதியிலும் 150 தலித் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வலப்பிரமன்காடு, கடையன்குண்டு குளக்கரை அருகே உள்ள சுடுகாட்டையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டுக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் தனியார் தோப்புகளில் புகுந்தும், விளைந்த பயிர்களின் நடுவே வயலில் இறங்கியும் சடலத்தை தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.

கடந்த 7ம் தேதி இறந்த நெல்லியடிக்காடு பகுதியை சேர்ந்த தெய்வானையின் சடலத்தை (55) பாடை கட்டி வயலில் இறங்கி கொட்டும் மழையில் தூக்கி சென்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் கூறுகையில், சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்து செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். விவசாயம் இல்லாத காலங்களில் பெரிதாக பிரச்னை இல்லை. ஆனால் சாகுபடி காலங்களிலும், மழை காலங்களிலும் இறப்பு நேரிட்டால் நாங்கள் அனுபவிக்கும் சிரமம் கொஞ்சமில்லை. வரப்பு, முள்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழை காலத்தில் சடலத்தை புதைக்கவும், எரியூட்டவும் போதிய வசதியில்லை. எனவே தகன மேடையும் அமைத்து தர வேண்டும்.

இதுகுறித்து பலமுறை வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் வந்து பார்வையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பல ஆண்டு கால பிரச்னையை தீர்த்து சுடுகாடு செல்ல சாலை வசதி அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>