×

பொதுப்பணித்துறை அலட்சியத்தால் வறண்டு கிடக்கும் சிகு ஓடை கண்மாய்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

தேனி: தேனி பொம்மையகவுண்டன்பட்டி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் சிகு ஓடை கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு தம்புரான் மலை கால்வாய் மற்றும் ஆகாச கங்கை ஓடை வழியாக நீர் வருகிறது.
இக்கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. மேலும் இக்கண்மாயில் நிரம்பும் நீரைக்கொண்டு அல்லிநகரம், ஊஞ்சாம் பட்டி, சுக்குவாடன்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. ஆனால், சிகு ஓடை கண்மாய் நீர் நிரம்பாமல்வறண்டு போய் உள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணகுமார், சிகு ஓடை கண்மாய் பாசன விவசாயிகள் வக்கீல் கருப்பசாமிபாலன், ஞானம் உள்ளிட்டோருடன் நேற்று மாலை கண்மாயில் ஆய்வு செய்தார்.

இது குறித்து எம்எல்ஏ சரவணக்குமார் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதற்கு பொதுப்பணித்துறையின் அலட்சியமே காரணம். இக்கண்மாயில் நீர்நிரம்புவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கான குடிநீர் ஆதாரமான நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு பயன்படும். எனவே கண்மாயில் நீரை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்; தவறினால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

Tags : Siku Odai Kanmai ,DMK MLA , theni
× RELATED அண்ணா பல்கலை. பதிவாளராக டாக்டர்...