×

மயிலாடுதுறை அருகே சேமங்கலம் ஊராட்சியில் 2 இடங்களில் ஆற்றின் கரை உடைப்பு பல கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சேமங்கலம் ஊராட்சியில் அய்யாவையனாறு கூத்தூர் சட்ரஷ் அருகே இரண்டு இடங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே சேமங்கலம் ஊராட்சியில் அய்யாவையனாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு கரைகளையும் தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் ஆலவேளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சேமங்கலம் கூத்தூர் சட்ரஷ் அருகே இரண்டு இடங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் விவசாய நிலங்களில் அதிக அளவில் புகுந்து வருகிறது.

இதனால் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் கழுத்தளவு நீரில் மூழ்கியுள்ளது. தற்போது பொதுப்பணித்துறையினர் உடைப்பு ஏற்பட்ட பகுதியை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்து வருகின்றனர். தொடர்ந்து தண்ணீர் வேகமாக புகுந்து வருவதால் சேமங்கலம், வாங்கல், ஆண்டியூர், கண்டமங்கலம், புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டு வருகிறது. இனிமேல் தாங்கள் நடவு செய்த சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாது என்றும், உடனடியாக இப்பகுதியில் பயிர் சேதத்தை கணக்கிட்டு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவாடை பகுதி, மங்கைநல்லூர், வழுவூர் போன்ற 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாளடி விவசாயம் தாமதமாக நட்டுள்ளனர். தற்பொழுது 30 நாள் பயிராக இருந்த நிலையில் தொடர் மழையால் ஆங்காங்கே சுமார் 300 ஏக்கருக்குமேல் இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. அவைகள் அனைத்தும் அழுகி நாசமாகிவிடும். மேலும் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான தாளடி விவசாயப் பயிர்கள் பால்பிடித்து கதிர் வெடிக்கும் நிலையில் தண்ணீருக்குள் இருந்ததால் வெளிவரும்கதிர்களில் போதிய நெல்மணிகள் இருக்காது என்றும் நெல் அறுவடையின்போது இதன் தாக்கம் தெரியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். பண்டாரவாடை அண்ணாமலை வாய்க்கால் மற்றும் பண்டாரவாடை வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. தூர்வாரிய பகுதிவரை வடிந்த தண்ணீர் அதற்குமேல் செல்லமுடியாமல் பயிர்களில் புகுந்துவிட்டது.

இதனால் தான் இளம்பயிர்கள் முற்றிலும் அழுகியுள்ளது, உடனடியாக விவசாயத்துறை மட்டுமின்றி வருவாய்துறையினர் பண்டாரவாடை கிராமத்திற்குச் சென்று பண்டாரவாடை வடிகால் வாய்க்கால் மற்றும் அண்ணாமலை வாய்க்கால் பகுதி தூர்வாராமல் கிடப்பதை பார்வையிட்டு உரிய நடவடிகை எடுக்கவேண்டும் என்று பண்டாரவாடை ராஜேந்திரன் தெரிவித்தார். மேலும் மங்கைநல்லூர் சண்முகநாதன் கூறுகையில், விவசாயதுறையினர் வருகிறார்கள். சாலையிலேயே நின்றுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.அவர்கள் வயலுக்கு சென்று பார்த்தால்தானே அதன் உண்மைத்தெரியும். மாவட்ட நிர்வாகம் விவசாய துறையினரை பாதிக்கப்பட்ட வயல்களுக்குச் சென்று பார்வையிட சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags : River breakage ,places ,panchayat ,Mayiladuthurai ,villages , Mayiladuthurai, risk
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!