×

அரணநல்லூரே பெரணமல்லூரானது: இலங்கையில் போர் புரிந்து நெடுங்குணத்தில் தங்கிச் சென்ற ராமர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி- வந்தவாசி நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் பெரணமல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. அக்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்களுக்கு முன்பாக எதிரி நாட்டுப் படைகள் உள்ளே நுழையாத வண்ணம் அரணாக நின்று போர் புரியும் வீரர்கள் இருந்த பகுதியாக அரணநல்லூர் இருந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. பிற்காலத்தில் இந்த அரணநல்லூர் பேச்சு வழக்கில் பெரணமல்லூர் என்று மாறியதாகா முன்னோர்கள் கூறுகின்றனர். பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது.‌ 6ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் 82 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.

பெரணமல்லூரானது இருபுறமும் பெரியஏரி, சித்தேரி அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் ஏரிக்கரையின் கீழே உள்ள பகுதியில் அமைந்த விளைநிலங்களில் எப்போதும் விவசாயம் நடைபெற்று வரும். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை உள்ளது.ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலை பகுதிக்கு உட்புறமாக பெரணமல்லூர் அமைந்துள்ளதால் இதுவரை குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அடையவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பஸ் வசதி, நிலையான பஸ் நிலையம் என்று ஏதுமில்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு தான் பஸ் வசதி உள்ளது. எனவே சடத்தாங்கல் கூட்டுரோடு வழியே செல்லும் பஸ்களை பெரணமல்லூர் பகுதி வழியே திருப்பினால் பஸ் வசதி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கடந்த 2011ம் ஆண்டு வரை பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதியாக இருந்தது. தொகுதி பிரிப்பினால் பெரணமல்லூர் தொகுதி வந்தவாசி, ஆரணி, போளூர் உள்ளிட்ட தொகுதிகளில் சேர்க்கப்பட்டது.இதனால் பெரணமல்லூர் மேலும் பின்தங்கிவிட்டது. பெரணமல்லூர் பேரூராட்சி வந்தவாசி தனித் தொகுதியின் கீழ் அடங்கி விட்டது.

தொகுதியில்லாத காரணத்தினால் வளர்ச்சியானது மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு முயற்சிக்கும் பொதுமக்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெரணமல்லூர் பேரூராட்சியை, தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டி அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும், மனுக்களும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

தாலுகாவிற்கான அைனத்து தகுதிகளையும் ஒருங்கே பெற்ற பெரணமல்லூரை தாலுகாவாக தரம் உயர்த்தினால் ஓரளவிற்கு வளர்ச்சியடையும். பெரணமல்லூர் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் வந்தவாசி, ஆரணி, செய்யாறு தாலுகா அலுவலகம் தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.

இது தவிர பெரணமல்லூர் பேரூராட்சி சிறந்த ஆன்மீக தலமாகவும் இருந்து வருகிறது. இங்கே எல்லை கிராம தேவதையான எட்டியம்மனை பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். மேலும் வரலாற்று சிறப்புமிக்க சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கரை ஈஸ்வரர் கோயில் பெரணமல்லூரில் அமைந்திருப்பது பெருமைக்குரியது.

இந்த கோயில் 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்கிய கோச்செங்கண் சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இவர் தமிழகம் முழுவதும் கட்டிய 70 கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாக விளங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இந்த மன்னன் கோயில் கட்டும்போது அதில் யானை, சிலந்தி சிவபெருமானை தரிசிக்க நடத்திய யுத்தம் குறித்த தகவல்கள் பொருந்திய கல்வெட்டு அமைந்திருக்கும். அந்த கல்வெட்டு இக்கோயிலிலும் உள்ளது. மேலும் மூலவர் இருக்கும் கருவறை யானை வயிறு போன்று கட்டுவது இந்த மன்னனின் சிறப்பு. தவிர பெரணமல்லூர் ஒன்றியளவில் ஆவணியாபுரம் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. சுற்றுலா தலமாக மாறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் உள்ளது.

இக்கோயிலில் நடைபெறும் சனிவார வழிபாட்டில் தமிழகமெங்கும் உள்ள பக்தர்கள் இங்கு வந்து இரவு தங்கி செல்வார்கள். இங்குள்ள நரசிம்மர் சிங்க முகத்துடன் காணப்படுவது சிறப்பு.‌ விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர் செழிப்பாக வளர வேண்டி இங்கு பிரார்த்தனை செய்து விட்டு செல்வார்கள் பிரார்த்தனை மூலம் பலன் கிடைத்தவுடன் விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக இந்த கோயிலில் அளித்து நரசிம்மரை வணங்குவார்கள். இதன் காரணமாக இவரை தானிய பெருமாள் என்றும் பக்தர்கள் கூறுவார்கள்.

இந்தக் கோயிலில் திருப்பதி அடுத்து இங்கு இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள் சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பாக நடைபெறுகிறது.‌ மேலும் பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு கிராமத்தில் சைவம், வைணவம் இரண்டிற்கும் உண்டான கோயில் தலங்கள் அமைந்துள்ளது.

சைவத் திருத்தலமான திருமணிசேறை உடையார் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் என்றும் வற்றாத சுனை நீர் உள்ளது.‌ இந்த சுனையில் எந்த கோடைகாலத்திலும் நீர் வற்றாமல் இருக்கும். இந்தக் கோயிலை இந்த கிராமத்தில் பிறந்து கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த ஐ.ஆர். பெருமாள் என்பவர் ஓய்வு பெற்று தற்போது ஆன்மீகத்தில் இறங்கி பராமரித்து வருகிறார்.

மேலும் இந்த கிராமத்தில் வைணவத்திற்குரிய வரதராஜ பெருமாள்  கோயில் அமைந்துள்ளது.‌ அகோபில மடம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் ராமர் யோக ராமராக போற்றப்படுகிறார். திருமண தடை நீங்கும் நம்பிக்கையில் பக்தர்கள் இங்கு வந்து ராமரை தரிசித்து செல்கின்றனர்.

அகோபில மடாதிபதிகள் 34வது பட்ட ஜீயர் சடகோப ராமானுஜ யதீந்தர மஹோதேசிகன் மற்றும் 42வது பட்ட ஜீயர் ரங்க சடகோப யதீந்தர மஹோதேசிகன் பிறந்த கிராமம் என்ற பெருமைக்குரியது. தவிர நெடுங்குணம் பகுதியில் உள்ள ராமச்சந்திர பெருமாள் கோயில் மூலவர் ராமர் யோகநிலையில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இலங்கையில் ராவணணுடன் போர் புரிந்து வெற்றியுடன் திரும்பிய ராமர் நெடுங்குணம் பகுதி வழியாகச் செல்லும்போது இங்குள்ள ரிஷிமுனிவர் ராமரை தங்கிவிட்டு செல்லுமாறு வேண்டுதலுக்கு இணங்க ராமர் மகிழ்ச்சியுடன் நெடுங்குணத்தில் தங்கி விட்டுச் சென்றதாக வரலாறு கூறுகின்றது. ஆகையால் ராமர் தங்கியிருந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்டப்பட்டது. அங்குள்ள கோயிலில் உள்ள ராமர் கையில் வில், அம்பு ஏதுமில்லாமல் யோகநிலையில் அமைந்திருப்பது இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது.

இவ்வாறு பெரணமல்லூர் ஒன்றியம் ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் பெரணமல்லூர் பேரூராட்சி வளர்ச்சிக்காக தள்ளாடும் நிலையில் இந்தப் பகுதியை தமிழக அரசு தாலுகாவாக அறிவித்தால் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையில் அனைத்து தரப்பு பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Ram ,Sri Lanka ,war , Thiruvannamalai
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...