×

மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரிப்பால் குமரியில் அழிவின் பிடியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் முக்கிய பயிராக ரப்பர், நெல், வாழை, தென்னை, மரவள்ளி கிழங்கு விவசாயம் விளங்கி வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்வது வழக்கம். மரவள்ளி கிழக்கு 9 முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் சுமார் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடந்தது. ஒரு ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய சுமார் ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்தனர். அறுவடையின் போது ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை லாபம் கிடைத்தது.

குமரி மாவட்டத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்குகள் சேலம் மற்றும் ஈரோடு பகுதியிலுள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கேரளாவிற்கு உணவிற்காகவும் கொண்டு செல்லப்பட்டது. குமரி மாவட்டத்தில் மரவள்ளியில் கரியிலை பொரியன், நூறுமுட்டன், உள்ளி சிவப்பன், அடுக்கு முட்டன் உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் அதிக அளவு வருமானம் கிடைத்து வந்ததால், விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிட்டு வந்தனர். இதற்கு தண்ணீர், உரம் அதிகம் தேவை இல்லை. ஆனால் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த நாளில் இருந்து குறைந்தது, 6 முறையாவது மண்ணை கிளைத்து போட வேண்டும். அப்படி என்றால் தான் அதிக மகசூல் கிடைக்கும்.

இந்நிலையில் குமரியில் கடந்த சில வருடங்களாக மரவள்ளி கிழங்கு சாகுபடி குறைந்து வருகிறது. இதற்கு காரணம் மாவுபூச்சி தாக்குதல். மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு, இலை வந்த நாளில் இருந்து இந்த மாவுபூச்சியின் தாக்குதல் தொடங்குகிறது. இலையின் அடிபகுதியில் இருந்து கொண்டு மரவள்ளி செடிக்கு செல்லும் அனைத்து சத்துகளையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. இதனால் செடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் தடுக்கப்படுவதுடன், இலை கருகி, மகசூல் அடியோடு பாதிக்கப்படுகிறது. மாவுபூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் மரவள்ளிக்கு பெயர் போன குமரி மாவட்டம் தற்போது மரவள்ளி சாகுபடி செய்யும் தன்மையை இழந்து வருகிறது.

இது குறித்து விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கடந்த 1970ம் ஆண்டு காலங்களில் கடுமையான பட்டினி ஏற்பட்டது. அப்போது குமரி மாவட்ட மலைகளில் சில பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு, அதில் ரப்பர் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டது. ரப்பர் மரங்கள் வளர்வதற்கு குறைந்தது 3 வருடங்கள் ஆகும். அந்த காலகட்டத்தில் ரப்பர் மரங்களுக்கு இடையே ஊடுபயிராக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்தனர். மரவள்ளி கிழங்கு அறுவடை தொடங்கும் வேளையில் கேரள வியாபாரிகள் வந்து கிழங்குகளை விலைக்கி வாங்கிச்செல்வார்கள். அப்போது தரம் குறைந்த கிழங்குகளை குறைந்த விலைக்கு அங்கேயே விற்பனை செய்வார்கள். அதனை வாங்க ஊரில் உள்ள பொதுமக்கள் செல்வார்கள்.

குறைந்த விலைக்கு கிடைக்கும் மரவள்ளி கிழங்கை வீட்டிற்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டு பசியை போக்கினர்.  அத்தகைய மரவள்ளி சாகுபடி குமரி மாவட்டத்தில் தற்போது குறைந்து வருவது வருத்தத்திற்குரியதாக உள்ளது.இதே நிலை நீடித்தால் மரவள்ளி கிழங்கு இன்னும் சில வருடங்களில் காட்சி பொருளாக மாறும் நிலை ஏற்படும்.

குமரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகளை கேரள வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து சென்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால் கடந்த 3 வருடமாக மரவள்ளி செடியில் மாவுபூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால், மரவள்ளி சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. மாவுபூச்சி கட்டுப்படுத்த மருந்து அடித்தாலும், அது குறைவது இல்லை. மாவுபூச்சி காற்று மூலம் பரவுகிறது. மேலும் மாவுபூச்சியின் மீது சுரக்கும் திரவத்தை சாப்பிட எறும்புகள் அதிக அளவு வருகிறது. திரவத்தை சாப்பிட்டுவிட்டு வேறு பகுதிக்கு செல்லும்போது, எறும்புகள் மூலம் இந்த மாவு பூச்சி பரவல் அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் மரவள்ளி சாகுபடி குறைந்துள்ள நிலையில் வேறு பகுதிகளில் இருந்து மரவள்ளி கிழங்கு குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருகிறது. ஒரு கிலோ மரவள்ளி கிழங்கு ரூ.30 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் மாவு பூச்சியின் தாக்குதலை அடியோடு அழித்துவிட்டு, அழிந்து வரும் மரவள்ளி சாகுபடிக்கு அதிகாரிகள் உயிர்கொடுக்க வேண்டும் என்றார்.

வேப்பெண்ணை அடிக்கலாம்

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தற்போது 911 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி நடந்து வருகிறது. மாவுபூச்சியை கட்டுப்படுத்த வேப்பெண்ணை அடிக்கலாம். மேலும் தற்போது பருவமழை பெய்து வருவதால், மாவுபூச்சியின் தாக்குதல் குறைவாக இருக்கும். மாவுபூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் வேப்பெண்ணை அடிக்கும்போது, அவர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.930 தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும். என்றார்.

ஆய்வு செய்ய வேண்டும்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் செல்லும் வழியில் ஸ்ரீகாரியம் என்னும் இடத்தில் மத்திய அரசின் கிழங்கு வகைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையம் ஆசியாவிலேயே கேரளாவில்தான் இயங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கில் தொடங்கிய மாவுபூச்சி தாக்குதல், கொய்யா, மற்றும் பூ செடிகளுக்கும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேரளாவில் உள்ள கிழங்குவகை ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் குமரி மாவட்டத்திற்கு வந்து ஆராய்ச்சி செய்து மரவள்ளிகிழங்கு செடியில் பரவும் மாவு பூச்சியை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumari , Cassava
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...